* 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் பங்கேற்பு, சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு
சென்னை: சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில், விமான சேவைகள் இயக்கங்களில் பாதுகாப்பு நலன் கருதி, ஒவ்வொரு ஆண்டும் இந்த விமான நிலையங்களில் தனித்தனியே, இந்திய விமான நிலைய ஆணையம் மூலம், பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படும். இந்த பாதுகாப்பு ஒத்திகை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக, விமான நிலையங்களில் நடத்தப்படும். முதல் ஆண்டு நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையில், சுமார் 25 சதவீதம் அளவில் சிறிய அளவில் நடத்தப்படும்.
இரண்டாவது ஆண்டு 50 சதவீதம் அளவில் ஓரளவு பெரிய அளவில், நடத்தப்படும். மூன்றாவது ஆண்டில் 100 சதவீதம் முழு பெரிய அளவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும். இந்த பாதுகாப்பு ஒத்திகைகள், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில், வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு விமான நிலையங்களில் நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மிகப்பெரிய விமான விபத்து காரணமாக, இந்த பாதுகாப்பு ஒத்திகைகளை முன்னதாக, உடனடியாக வெவ்வேறு நாட்களில் இந்தியாவில் உள்ள முக்கிய விமானங்களில் நடத்தும்படி இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் எனப்படும் விமான பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை தொடர்ந்து, முதலாவதாக சென்னை விமான நிலையத்தில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. 100 சதவீதம் முழு அளவில் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில், சென்னை விமான நிலையம் சார்புடைய அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்கள், காவல்துறை போக்குவரத்து காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, அதிரடிப்படை உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே, அல்லது பழைய விமான நிலைய பகுதிகளில் மட்டுமே இதேபோன்ற பாதுகாப்பு ஒத்திகை நடப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக, விமான நிலையத்திற்கு வெளியே, அருகே உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் ஓடிஏ மைதானத்தில் நடந்தது. நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து வர்த்தக விமானம் ஒன்று, 50 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் ஓடை அருகே மோதி விபத்துக்குள்ளானதாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அவசரமாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு குழுவினர், மருத்துவக் குழுவினர், 14 ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதிரடிப்படை வீரர்கள், சென்னை மாநகர போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பிசிஏஎஸ் எனப்படும் விமான பாதுகாப்பு துறையினர் அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விமான நிலைய தீயணைப்பு வண்டிகள் மட்டுமின்றி, தமிழக அரசின் தீயணைப்பு வண்டிகள் போன்றவைகளும் வந்து, தீயை உடனடியாக அனைத்து,
காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவ உதவிகள் செய்யப்படுவது போலவும், பிசிஏஎஸ், சிஐஎஸ்எப் போன்றவர்கள் உடனடி புலன் விசாரணை மேற்கொண்டு, விபத்து எவ்வாறு நடந்தது, சதி வேலை காரணமா, இல்லை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறா, விமானிகளின் கவன குறைவா என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்துவது போலவும், ஒத்திகைகள் நடந்தன.
இந்த ஒத்திகைக்கு பயன்படுத்துவதற்காக, பழைய கண்டம் செய்யப்பட்ட விமானத்தின் உதிரி பாகங்களை இணைத்து, விமானம் போலவே உருவாக்கி, அது தீப்பிடித்து எரிவது போல் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த காட்சியை பார்த்த போது உண்மையிலேயே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிவது போல் இருந்தது. இந்த மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்திகை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அதன்பின்பு, நடந்தது அனைத்தும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை தான். எனவே யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
* அடுத்த ஆண்டும் ஒத்திகை
சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி.தீபக், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஒத்திகை வழக்கமாக நடப்பது தான். ஆனால் அகமதாபாத் விமான விபத்துக்கு பின்பு, ஒத்திகையை பெரிய அளவில் நடத்தும்படி இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று (நேற்று) இந்த ஒத்திகை சென்னை விமான நிலையம் அருகே உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகைக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தின், அனைத்து பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் அனைத்து பிரிவை சேர்ந்தவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை இந்திய விமான நிலைய ஆணைய உயர் அதிகாரிகள், மற்றும் தன்னார்வல நிபுணர்கள், ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் ஒத்திகை குறித்து அறிக்கைகளை அளிப்பார்கள்.
அதை பரிசீலனை செய்து, அடுத்த ஆண்டு நடக்கும் ஒத்திகையில், சற்று மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு செய்து தீபக் கூறினார். இதுபோன்ற மிகப்பெரிய அளவில் 100 சதவீத ஒத்திகை, ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவிலான ஒத்திகை வருகிற 2028ம் ஆண்டு நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.