அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 163 சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, 124 உடல்கள் இதுவரை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12 அன்று மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. லண்டன் செல்லும் விமானத்தில் 241 பேர் இறந்தாலும், ரமேஷ் என்ற பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
மருத்துவக்கல்லூரி மீது விமானம் மோதியதில் அங்கு இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 29 பேர் பலியானார்கள். விமானம் விழுந்து நொறுங்கியதும் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் அடையாளம் காண இயலாதவகையில் கருகிவிட்டன. எனவே டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டன. விபத்து நடந்து 5 நாட்கள் கழிந்து இதுவரை 163 பேர் சடலங்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 124 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
மீதமுள்ள உடல்கள் விரைவில் அடையாளம் காணப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறுகையில்,’ விமான விபத்தில் சிக்கிய அனைவரின் டிஎன்ஏ தகவல்கள் இன்று காலைக்குள் நிறைவடையும். இதுவரை 250 உறவினர்களிடம் இருந்து மாதிரிகள் அடையாளம் காண சேகரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.