அகமதாபாத்: அகமதாபாத்தில் விமானம் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்தபோதும் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு விமானம் ஆபத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் “மே டே” என அவசர தகவல் அனுப்பினார். பிறகுதான் விமானம் தொடர்பை இழந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியை தொடர்பு கொள்வதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த வார்த்தை ஏன் பயன்படுத்தப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பார்க்கலாம்.
“மே டே” என்பது உலகளவில் விமானிகள் மற்றும் கடற்படைகள் அவசர அழைப்பு குறியீடாக பயன்படுத்தும் சொல். இது “Help me” அல்லது “Emergency” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை பிரெஞ்சு மொழியில் “m’aidez” உதவி செய்யுங்கள் என்பதிலிருந்து வந்ததாகும். விமானத்தில் தீவிரமான தொழில்நுட்ப கோளாறு, தீ, எரிபொருள் குறைவு, பயணிகள் உயிருக்கு அபாயம் போன்ற சூழ்நிலைகளில் விமானி தன்னுடைய நிலையை உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க “மே டே” என மூன்று முறை கூறுகிறார். இது மிகுந்த அவசர நிலையை குறிக்கிறது.
“மே டே” க்கு அடுத்த முக்கிய குறியீடு “Pan-Pan”. இது அவசர நிலை என்றாலும், உடனடி உயிருக்கு அபாயம் இல்லாத சூழ்நிலையை குறிக்கிறது. “மே டே” என்று கூறும் போது, விமான கட்டுப்பாட்டு அறை உடனடியாக அந்த விமானத்திற்கு முன்னுரிமை அளித்து, தேவையான உதவிகளை ஏற்பாடு செய்யும். இது விமானிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்காக மிக அவசியமான நடைமுறையாகும். விமானிகள் “மே டே” என்று கூறுவது, விமானத்தில் மிகுந்த அவசர நிலை ஏற்பட்டதை உலகளவில் புரிந்துகொள்ளும் வகையில் பயன்படுத்தப்படும் அவசர குறியீட்டு சொல் என்பதே இதன் முக்கிய நோக்கம்.