புனே: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு புனேவில் கூறுகையில்,” ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என்பது ஊகம் தான். கருப்பு பெட்டி இந்தியாவில் தான் இருக்கிறது. தற்போது விமான விபத்து புலனாய்வு பணியகத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது” என்றார்.
விமான பாகங்கள் அகற்றம்: அகமதாபாத்தில் மேக்ஹானிநகரில் விடுதியில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளான இடங்களில் இருந்து விமானத்தில் எரிந்த பாகங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. குஜராத் மாநில விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவனத்தின் கட்டிடத்துக்கு இந்த சேதமடைந்த பாகங்கள் மாற்றப்பட்டு வருகின்றது. காவல்துறையினர் லாரிகள் மூலமாக மூன்றாவது நாளாக நேற்றும் விமானத்தின் பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அகமதாபாத் விமான விபத்து பலி 275 ஆனது: அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர், விமானம் விழுந்ததில் 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது விமான விபத்து பலி 275 என்றும், விமானம் விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து இருப்ப தாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.