சென்னை: வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.103.38 கோடியில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார். ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற காய்கறி விதைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய 9 லட்சம் பழச்செடி தொகுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் அடங்கிய ஒரு லட்சம் பயறு வகை விதைத் தொகுப்புகள் ஆகியவற்றை விவசாய பெருமக்களுக்கு வழங்கும் வகையில், 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கி, இப்புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் – குப்பநத்தம் மற்றும் படவேடு ஆகிய இடங்களில் ரூ.8.68 கோடியில் 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் – பழந்தண்டலம் உள்ளிட்ட இடங்களில் ரூ.5 கோடியில் 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.103 கோடியே 38 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.