சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமையகத்தில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். பின்னர் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை: வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பாஜவின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும். பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும். தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது. அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது.
அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழகப் பொருளாளர் செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், ராசேந்திரன், ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.