சென்னை: விவசாய பயன்பாட்டுக்கான நிலத்தடி நீரூக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கை: இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது.
நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது. நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அரும்பாடு பட்டு நிலத்தடி நீரை எடுக்கும் எந்த உழவரும் அதை வீணாக்க மாட்டார்கள்.
நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க அரசு நினைத்தால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் உழவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுத்து ஊக்குவிப்பதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். வரி விதிப்பது சரியானதாக இருக்காது.
விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கனவே பல வகைகளில் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து உழவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. அத்தகைய ஆபத்தான திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும்.