சென்னை: ஈரோடு மாவட்டத்தில் வரும் 11ம் தேதி வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்-2025 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அனைவரும் பங்கேற்றுப் பயன்பெற வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முதலாக வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை தயாரித்து, கடந்த நான்கு ஆண்டுகளில் உழவர்கள் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 2025-26ம் ஆண்டிலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டுவருகின்றன.
பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தற்போதைய அனைத்து விவரங்களையும் வாய்ப்புகளையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்களிடையே ஏற்படுத்திடும் வகையில் இந்த ஆண்டு வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆண்டின் முதல் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்” ஈரோட்டில் நடைபெறுதல்
வளர்ந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் விதைகள், ஒட்டு ரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் பிறவகை மரக்கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற்பனை, உயர் ரக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் மற்றும் இவை குறித்த கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு வரும் 11ம் தேதி மற்றும் 12ம் தேதி ஆகிய இரு தினங்களில் ஈரோடு மாவட்டம்,
பெருந்துறை வட்டாரம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு-2025 விழாவினை மிகச்சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் ேததி தொடங்கி வைத்து, உழவர்களுக்கு திட்டப்பலன்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.