சென்னை: பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2024-25ம் ஆண்டில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09 சதவீதம் என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 2024-25ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 60 விழுக்காட்டினர் வேளாண்மையைத் தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். வேளாண் தொழில் வளர்ந்தால்தான் அந்த 60 சதவீத மக்களும் முன்னேறுவார்கள். அவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது. எனவே, வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.