Thursday, June 12, 2025
Home செய்திகள்Banner News 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 4 ஆண்டில் 5.66% வேளாண் வளர்ச்சியடைந்து சாதனை: பால் உற்பத்தி 1446 மெ.டன் அதிகரிப்பு

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 4 ஆண்டில் 5.66% வேளாண் வளர்ச்சியடைந்து சாதனை: பால் உற்பத்தி 1446 மெ.டன் அதிகரிப்பு

by MuthuKumar

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதம் வேளாண் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்ததுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலாண்டிலேயே திராவிட மாடல் அரசு வேளாண்மைக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைச் சட்டப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேளாண் உற்பத்தி பெருக – உழவர் பெருங்குடி மக்கள் நலம்பெற புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது. முதல்வரின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் 2012-13 முதல் 2020-21 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்தது.

திராவிட மாடல் அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடம். வேர்க்கடலை, தென்னை உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு மூன்றாம் இடம் என்று சாதனைகள் படைத்துள்ளது திராவிட மாடல் அரசு.

பாசனப் பரப்பை உயர்த்தி விளைச்சலைப் பெருக்கிய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற சில நாட்களில் வேளாண் சாகுபடி நிலப்பரப்பு அதிகரிக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் 2020-21ல் இருந்த பாசனம் பெற்ற நிலப்பரப்பு 36.07 லட்சம் எக்டர் என்பது, 2023-24ல் 38.33 லட்சம் எக்டர் என அதிகரித்து உணவுப்பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன.

வேளாண்மைக்கு உயிர்நாடிகளான ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் முறையாக உரிய நேரத்தில் நிறைவேறினால்தான் கடைக்கோடிப் பகுதிகளின் பாசனத்திற்கும் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்கக்கூடும். எனவேதான் தூர்வாரும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5,427 கி.மீ. நீளத்திற்கு சி,டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் 8,540 சிறுபாசனக் குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,382 புதிய பண்ணைக்குட்டைகளும், 2,474 ஆழ்துளை, குழாய்க் கிணறுகளும் ஏற்படுத்தப்பட்டன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் மீள் சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டன. 213 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேசிய வேளாண் சந்தை தளத்துடன் இணைக்கப்பட்டு, ரூ.6,636 கோடி மதிப்பிலான 22.71 லட்சம் மெ.டன் விளைபொருள் வர்த்தகம் நடைபெற்று 19 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

வேளாண்துறை இயந்திரமயமாக்குதல் திட்டப்படி ரூ 499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. ரூ.96.56 கோடி மதிப்புடைய 1205 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுச் சிறு விவசாயிகளுக்குக் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. 1,652 புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இ-வாடகை சேவை மையங்கள் மூலம் 69,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பாசன வசதிகளை மேம்படுத்திட வேண்டுமென 2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உத்தரவிட்டார். அதன்படி 27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. சிறு விவசாயிகளும் பயன்பெற்று வேளாண் உற்பத்திகளைப் பெருக்கிட 814 சிறுபாசன ஏரிகள் ரூ75.59 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு விவசாய வளர்ச்சிக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்படுவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பாசனப் பணிகள் சிறப்படையும், இந்த நோக்கத்தில் 24 மாவட்டங்களில் 88 தடுப்பணைகள் ரூ519 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு நிலத்தடி நீர் பராமரிக்கப்படவும் அவை உதவுகின்றன. பால் ஒரு முக்கியமான சரிவிகித உணவு எனக் கூறப்படும். உழவர்களின் துணைத் தொழிலாக விளங்கும் கால்நடை வளர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதிலும் திராவிட மாடல் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. அதன் பயனாக முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது, 2018-19ல் 8,362 மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் 2023-24ம் ஆண்டில் பால் உற்பத்தி, 10,808 மெட்ரிக் டன் என அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

முட்டை சத்துள்ள நல்ல உணவு. நம் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு முட்டை உணவு கிடைத்திட வேண்டும் என்பதால்தான் சத்துணவுத் திட்டத்தில் வாரம் 5 நாட்களும் 5 முட்டைகளை குழந்தைகளுக்குப் பள்ளிகளில் வழங்கிட கலைஞர் ஆணையிட்டு வழங்கினார். தேவைக்கேற்ப முட்டைகள் தாராளமாகக் கிடைத்திட வேண்டும் அல்லவா. அதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு கோழிப் பண்ணைகளுக்கு அளித்துவரும் ஊக்கத்தின் பயனாக முந்தைய ஆட்சியில் 2018-19ல் உற்பத்தியான ரூ.1884.22 கோடி முட்டைகளைவிட 2023-24ம் ஆண்டில் ரூ.2233.25 கோடி முட்டைகள், ஏறத்தாழ ரூ.350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தியாயின.

தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக உழைத்து கடல் நடுவே சென்று மீன்பிடித்து வந்து மக்களுக்கு வழங்குகின்றனர். மீனவ பெருங்குடி மக்களுக்கு உதவிடும் நோக்கில் திராவிட மாடல் அரசு ரூ.1,428 கோடி மதிப்பில் 72 மீன் இறங்கு தளங்களைப் புதிதாக ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மீன்பிடித் தொழில் சிறக்க தரங்கம்பாடி, ராமேஸ்வரம், திருவொற்றியூர் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடித் தொழில்கள் சிறக்கவும் பல திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீனவர் நலன் என ஒவ்வொரு துறையையும், தாய் தன் குழந்தைகளைப் பேணி வருதல்போல் வளர்த்துள்ளதால், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்து ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் எனும் பாராட்டுகளையும் புகழையும் குவித்து வருகிறது. என்றும், எதிலும் தமிழ்நாடு முதலிடமே எனும் முழக்கம் எங்கும் எதிரொலிக்கிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi