புதுடெல்லி: மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மலேசிய பிரதமரின் இந்திய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட உத்திசார் கூட்டாண்மை பத்தாண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன், நமது கூட்டாண்மை புதிய வேகத்தையும், சக்தியையும் பெற்றுள்ளது. இன்று நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து துறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். நமது இருதரப்பு வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை நாங்கள் கவனித்தோம். இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை இப்போது இந்திய ரூபாய் (INR) மற்றும் மலேசிய ரிங்கிட்களில் (MYR) செயலாக்க முடியும். கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது.
இன்று நமது கூட்டாண்மையை “விரிவான உத்திசார் கூட்டாண்மை” என்று உயர்த்த முடிவு செய்துள்ளோம். பொருளாதார ஒத்துழைப்பில் இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு விரிவுபடுத்தப்பட வேண்டும். குறைகடத்திகள், ஃபின்டெக், பாதுகாப்புத் தொழில், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் நமது பரஸ்பர ஒத்துழைப்பை நாம் மேம்படுத்த வேண்டும். இந்தியா, மலேசியா இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். டிஜிட்டல் குழுவை உருவாக்கவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான புத்தொழில் நிறுவனங்களின் கூட்டணியை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் யுபிஐ மற்றும் மலேசியாவின் பேநெட் ஆகியவற்றை இணைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். தலைமை நிர்வாக அதிகாரிகள் அமைப்பின் இன்றைய கூட்டம் புதிய சாத்தியக்கூறுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் நாங்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். இந்தியாவும், மலேசியாவும் பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று இணைந்துள்ளன. மலேசியாவில் வசிக்கும் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் இடையே, வாழும் பாலமாக திகழ்கின்றனர்.
இந்திய இசை, உணவு மற்றும் திருவிழாக்கள் முதல் மலேசியாவின் “தோரண் கேட்” வரை, நம் மக்கள் இந்த நட்பைப் போற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு மலேசியாவில் கொண்டாடப்பட்ட ‘பி.ஐ.ஓ (இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள்) தினம் மிகவும் வெற்றிகரமான, பிரபலமான நிகழ்வாக இருந்தது. நமது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டபோது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் உற்சாகம் மலேசியாவிலும் உணரப்பட்டது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான இன்றைய ஒப்பந்தம், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிப்பதோடு அவர்களின் நலன்களையும் பாதுகாக்கும். மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம்.
மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல், அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன படிப்புகளுக்கு ஐடிஇசி, (இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம்) கல்வி உதவித்தொகையின் கீழ், மலேசியாவுக்கு பிரத்யேகமாக 100 இடங்கள் ஒதுக்கப்படும். “துங்கு அப்துல் ரஹ்மான்” மலேசியாவில் ஆயுர்வேத இருக்கை ஒன்று அமைக்கப்படுகிறது. இது தவிர, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைத்த பிரதமர் அன்வர் மற்றும் அவரது குழுவினருக்கு நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆசியான் மற்றும் இந்தோ – பசிபிஃக் பிராந்தியத்தில் மலேசியா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக உள்ளது. ஆசியான் மையத்தன்மைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.
இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்த மறுஆய்வு உரிய காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். 2025-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக குரல் கொடுப்போம். மேதகு பிரதமரே, உங்களது நட்புக்கும், இந்தியாவுடனான உறவில் உங்களது அர்ப்பணிப்புக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களது வருகை வரும் பத்தாண்டுகளுக்கு நமது உறவுகளுக்கு புதிய திசையை அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.