மதுரை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலின் அக்னிதீர்த்த கடல் அருகே ராமேஸ்வரம் நகராட்சி கழிவு நீர் கடலில் கலக்கிறது. கழிவுநீர் கலப்பதால் கடல் நீர் அசுத்தமாகிறது. மேலும் பக்தர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர். எனவே, நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமேஸ்வரம் நகராட்சி வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, ‘‘சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர், 4 கிமீ தொலைவில் உள்ள ஓலைக்குடா எனும் பகுதியில் குழாய் மூலம் கொண்டு சென்று காடுகள் உருவாக்கி வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில் பகுதியில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க முடியும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.