நாகப்பட்டினம்: திமுக ஆட்சி பொறுப்பேற்றபின்னர், 3 ஆயிரமாவது கும்பாபிஷேகம் நாகப்பட்டினம் அருகே தொன்மை வாய்ந்த திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. நேற்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்றதை தொடர்ந்து காலை கடம் புறப்பாடு நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களை கோயிலை சுற்றி கோபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதனை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராஜகோபுரம் உள்ளிட்ட மூலஸ்தானத்திற்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றினர். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆயிரமாவது கும்பாபிஷேகமாக, இந்த அகனீஸ்வரர் கோயிலில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: இந்த ஆண்டின் இறுதிக்குள் 500க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திமுக அரசு கோயில்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் முறையாகவும், குறித்த நேரத்திலும் செய்து வருகிறது. திமுக அரசு ஆன்மிகத்தை போற்றி வருகிறது. ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் என கூறுபவர்களின் எண்ணம் நிறைவேற ஒருபோதும் ஆன்மிகவாதிகளும் பொதுமக்களும் விடமாட்டார்கள்.
தமிழகத்தில் 6 கோயில் கோபுரங்கள் ஒளிரூட்டப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் கோயிலில் ஒளிரூட்டும் பணி நிறைவுற்று தொடங்கி வைக்கப்பட்டது. வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் அமைந்துள்ள அவ்வையார் மண்டபத்தை புதுப்பொலிவுடன் மாற்றியமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ.18 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று சித்தர்களுக்கு, ஆன்றோர்களுக்கு, சான்றோர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மண்டபங்களை தமிழக அரசு கட்டி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியையும், முதல்வரையும் இறையன்பர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 3000வது கும்பிஷேக விழாவை கோலாகலமாக கொண்டாடியது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது. திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது என்பவர்களின் விமர்சனங்கள் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. திமுகவை விமர்சனம் செய்யும் பாஜ மற்றும் வலதுசாரி அமைப்பினருக்கு திமுக அரசால் வெற்றிகரமாக நடந்து வரும் குடமுழுக்கு விழாக்களை மட்டுமே பதிலாக சொல்கிறேன். இவ்வாறு இவர் தெரிவித்தார்.