சுல்தான்பூர்: உபி சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த 2001ல் மின் விநியோக குறைபாட்டை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. இதில், சஞ்சய் சிங், சமாஜ்வாடி கட்சியின் மாவட்ட தலைவர் அனுப் சந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடந்த போராட்டத்தின் போது, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகவும், வன்முறையை தூண்டியதாகவும் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், சஞ்சய் சிங்குக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் நேற்று சரணடைந்தார். அவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான பத்திரத்தில் ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது என சஞ்சய்சிங்கின் வக்கீல் மதன் சிங் தெரிவித்தார்.