பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (18), ஆஸ்திரேலியா வீராங்கனை டாரியா கசட்கினா (28) உடன் மோதினார்.
துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய ஆண்ட்ரீவா, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (21), ரஷ்ய வீராங்கனை ஏகதெரினா அலெக்சாண்ட்ரோவா (30) உடன் மோதினார். முதல் செட்டை எளிதாகவும், 2வது செட்டை போராடியும் கைப்பற்றிய கோகோ காஃப், 6-0, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.