திருவொற்றியூர்: மணலியில் உள்ள புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஆகாயத்தாமரையால் தூர்ந்துள்ளதால், மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. மழைக்காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பினால், உபரி நீர் வெளியேற்றப்படும்.
அப்படி வெளியேற்றப்படும் உபரிநீர் செங்குன்றம் பைபாஸ் சாலை, சாமியார் மடம், பாபா நகர், தண்டல் கழனி, புழல் கிரான்ட் லைன் இணைப்பு சாலை, திருநீலகண்ட நகர், காஞ்சி அருள் நகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூர் முகத்துவாரத்தில் இணைந்து கடலில் கலக்கிறது. சுமார் 15 கிமீ தூரம் உள்ள இந்த புழல் ஏரி உபநீர் கால்வாய் தற்போது பல இடங்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகொடிகள் வளர்ந்து தூர்ந்து கிடக்கிறது.
குறிப்பாக ஆமுல்லைவாயல் முதல் எம்எப்எல் சந்திப்பு வரை சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு முழுவதுமாக ஆகாய தாமரைகளும், முட்செடிகளும் வளர்ந்து கிடக்கிறது. இதனால் மழைக்காலத்தில் புழல் எரியிலிருந்து பெருக்கெடுத்து வரும் உபரிநீர் கால்வாயில் எளிதாக போக முடியாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. இந்த கால்வாய்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும் தற்காலிகமாக ஒருசில இடங்களில் மட்டுமே ஆகாயத்தாமரைகளை அகற்றியுள்ளனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘புழல் ஏரி உபரிநீர் கால்வாய் சரியாக ஆழப்படுத்தி அகலப்படுத்தாமல் இருப்பதால் ஒவ்வொரு பெருமழையின் போதும் வட பெரும்பாக்கம், மணலி, சடையங்குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கால்வாய் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த மழைநீரால் பாதிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக இந்த உபரி நீர் கால்வாயை முழுமையாக சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.