சென்னை : அரசு ஊழியர்களை போல திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42% உள்ள அகவிலைப்படி 46% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதனிடையே ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஏப்ரல் 1ம் தேதி 42% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு 46% அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.