Saturday, March 2, 2024
Home » அகேட் என்னும் உபரத்தினம்

அகேட் என்னும் உபரத்தினம்

by Kalaivani Saravanan

நிறமும் தரமும்

கல்வி, ஆராய்ச்சிக்கு உதவும் அகேட். மன அழுத்தம் குறைக்கும் அகேட். இடி, மின்னல், புயல், வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் அகேட். வேளாண்மை சிறக்கும். உபரத்தினங்கள் ஏராளமானவை உள்ளன. மாணவர்களுக்கு, ஆராய்ச்சியாளருக்கு, தொழிலதிபருக்கு ஏற்றவை அகேட் எனப்படும் பலவண்ண நிறமுடைய உபரத்தினம் ஆகும். அகேட் பச்சை, நீலம் மண் நிறம், வெண்மை, சாம்பல் போன்ற பல வண்ணங்களில் கிடைக்கும். எரிமலைக்குழம்பின் காற்று குமிழிகள் பாறை குளிர்ந்ததும் கற்களாக இறுகியதில் கிடைப்பவை அகேட் கற்கள் என்பர்.

கிரீஸ் நாட்டில் சிசிலி என்ற ஊரில் ஓடும் நதியின் பெயரால் இந்தக் கல்அழைக்கப்படுகிறது. அகேட் கற்களை சுமார் 3000 ஆண்டுகளாக வெளிநாட்டில் மக்கள் அணிந்து வருகின்றனர். அகேட் கல்லை கை மோதிரத்தில், காது தோட்டில், செயின் டாலரில், கை பிரேஸ்லெட்டில் பதித்து பல வழிகளிலும் அணிந்து வருகின்றனர். நமக்கு உகந்த நிறங்களில் கற்களைத் தெரிவு செய்யலாம். நம் ராசிக்கு ஏற்ற நிறங்களில் அகேட்கற்களை வாங்கி அணியலாம்.

என்ன நன்மை?

வெளிநாடுகளில் அகேட் கற்களை அதிர்ஷ்டம் தரவும், நோய் குணமாகவும் அணிகின்றனர். இடி, மின்னல், புயல், வெள்ளம் போன்ற இயற்கை ஆபத்து களில் இருந்து தங்களை காப்பாற்றும் என்று நம்பி அணிகின்றனர். அகேட், கண் நோய், தோல்நோய் தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பி பிரச்னைகள், ரத்தக்குழாய் நோய்கள் போன்ற பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் உடையது. மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அதிகரிக்கவும், ஆராய்ச்சியாளருக்கு பகுப்பாய்வு செய்வதில் அறிவும் நுட்பமும் செயல்படவும், அகேட் கற்கள் உதவும். இக்கற்களை அணிவதால், ஆன்மிக சக்தி வளரும். பாதுகாப்பு உணர்ச்சி பெருகும். மனநலம் சீராகும். மன அழுத்தம் குறையும். மனம் சமநிலைப்படும். கோப சாபங்களுக்கு இடம் தராது.

நாட்டு மருத்துவத்தில் அகேட்

வெளிநாடுகளில் நாட்டு மருந்துகளில் அகேட் பயன்பாடு அதிகம். பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றில் இருந்து தப்பிக்க அகேட் கல் அணியப்படுகிறது. அகேட் அணிந்தால், விஷ ஜந்துக்கள், விஷக்கிருமிகள், நோய்க் கிருமிகள் அண்டாது.

மெக்சிகோ நாட்டில் வாழும் செவ்விந்தியர், தங்களுடைய உடல் சோர்வைப் போக்கவும், மனஅமைதி பெறவும், அகேட் கற்களை அணிகின்றனர். எகிப்து நாட்டில் வெப்ப காலத்தில், தாகம் தீர்க்கவும், வெப்பு நோய்கள் அண்டாது இருக்கவும், அகேட் அணிகின்றனர். இடி, மின்னல், புயல், மழை போன்ற உபத்திரவங்களில் இருந்து தங்களைக் காப்பாற்றவும், அணிகலன்களில் அகேட் கல்லைப் பதித்து அணிவதுண்டு. சீனாவில் அதிர்ஷ்டம் தரத்தக்க கல்லாக அகேட்களை நம்பி வாங்கி அணிகின்றனர்.

யார் அணிய வேண்டும்?

இக்கற்களை, இன்னார்தான் அணிய வேண்டும் என்று கிடையாது. கற்களின் நிறங்களைக் கொண்டு அந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தில் வாங்கி அணியலாம். ரத்தினக் கற்களை வாங்க வசதி இல்லாதவர்கள், உபரத்தினங்களை வாங்கி அணியலாம்.

எங்கு எப்படி அணியலாம்?

பொதுவாக, ரத்தினங்களை வலது கை மோதிர விரலில் அணிவது நல்ல பலனைத் தரும். ஓபன் கட்டாக செய்து ரத்தினம் உடலில் படும்படி அணிய வேண்டும். காதணி, கழுத்து அணிகளில் பதிக்கப்படும் அகேட் அணிபவரின் உடலில் பட வேண்டும். நெஞ்சில் படும்படி டாலராக செய்து அணியக் கூடாது. உட்கழுத்தில் படும்படி பதக்கம், டாலரில் பதித்து அணியலாம். புதன் ராசிக்காரர்கள் பச்சை நிற அகேட் கற்களை வாங்கி அணைந்தால், புதன் கிரகத்திலிருந்து வெளிப்படும் பச்சை நிற ஒளிக்கதிர்கள் அகேட் கல் உள்வாங்கி அணிந்திருப்பவருக்கு புதனின் சக்தியை அதிகமாகப் பெற்று தரும். அதுபோல, நீலநிறக் கற்களை வாங்கி அணிந்தால் சனியின் சக்தியை அதிகமாக ஈர்த்துத் தரும். மகர, கும்ப ராசிக்காரர்கள் அகேட் அணிவதால் நல்ல பலன் அடையலாம்.

ஆன்மிக உணர்வுக்கு அகேட்

மன உறுதி, படைப்பாற்றல், வைராக்கியம் போன்றவற்றை அகேட் அதிகரிப்பதால், சிவப்பு நிற அகேட் கற்களை ஆன்மிகப் பெரியவர்கள் அணிந்திருப்பார்கள். மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் சிவப்பு நிற அகேட் அணிந்து முன்கோபம், படபடப்பு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

உலகெங்கும் அகேட்

பாப்புவா நியூ கினியா, கிரீஸ், ஆஸ்திரியா, மங்கோலியா, பெல்ஜியம், இத்தாலி, பின்லாந்து, ஜப்பான், ஹங்கேரி, இந்தியா, கனடா, துருக்கி, ஆப்பிரிக்கா, சீனா, ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, காங்கோ, கென்யா, ஸ்ரீலங்கா, நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அகேட் கற்கள் கிடைக்கின்றன. அந்த நாடுகளில் மக்கள் வாங்கி அணிகின்றனர்.

அகேட் கற்களின் வகைகள்

அகேட்டில் பல வகையான, பல வண்ணத்தில் கற்கள் உண்டு. மண் நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறம் வரை இருப்பவற்றை `போத்ஸ்வானா அகேட்’ என்பர். நீல நிறத்தில் பல இணை கோடுகள் காணப்படும் கற்களை `ஊதா கலர் ரிப்பன் அகேட்’ என்பர். நிறமற்ற அல்லது வெளிறிய வெண்மை நிறம் உடைய கற்களை `டென்டிரைட் அகேட்’ என்பர்.

இறகு, மேகம், புகை போன்ற தோற்றம் இருந்தால், அந்த அகேட் கல்லை `நெருப்பு வண்ணக்கற்கள்’ (Flame Plume Agate) என்று அழைக்கின்றனர். பச்சை நிறத்தில் பாசம் பிடித்தது போன்று கல்லுக்குள் தெரிந்தால் அக்கற்களை `பாசக்கல் அகேட்’ என்பர். இவற்றை `மாஸ் அகேட்’ (Moss Agate), `கோல்டன் மாஸ்’ (Golden moss Agate) இந்தியன் `கிரீன் மாஸ்’ (Indian Green Moss) என்ற பெயரால் அழைக்கின்றனர். உள்ளே நெருப்பு எரிவது போல, பிரவுன் நிறத்தில் இருக்கும் கற்களை `நெருப்பு அகேட்’ (Fire Agate) என்கின்றனர்.
ஒளி ஊடுருவக் கூடிய வானவில் போன்ற அடுக்கடுக்கான பல நிறங்கள் கொண்ட கற்களை `கண்மணி அகேட்’ (Iris Agate) என்பர். இவ்வாறு பல வகையான அகேட் கற்கள் உண்டு. அவரவர் ராசியாதிபதியின் நிறத்திற்கு ஏற்ற வகையில் வாங்கி அணியலாம்.

அகேட் பற்றி கிறிஸ்தவத் திருமறையில் ஆரோனின் நெஞ்சில் அணிந்திருந்த மார்புக் கவசத்தில் அகேட் கல் பதிக்கப் பட்டிருந்ததைக் குறிப்பிட்டுள்ளது. முற்காலத்தில் மேலைநாட்டில் உழவு மாடுகளின் கொம்புகளுக்கு நடுவே ஒரு அகேட்கல்லைக் கட்டித் தொங்க விடுவார்கள். அகேட் இருக்கும் இடத்தில், செல்வம் பொழியும், சிறு சம்பா நெல் விளையும். விளைச்சல் பெருக வேண்டும் என்பதற்காக அகேட் கல்லை இவ்வாறு விவசாயிகள் மாட்டுக் கொம்புகளின் நடுவில் கட்டி விடுவதுண்டு.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

You may also like

Leave a Comment

17 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi