சென்னை: கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு கனவு இல்லம் என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என்று 2022ம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என்று அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கவிஞர் மு.மேத்தா உள்ளிட்டோருக்கும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திலகவதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள் ராஜ் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு ஒதுக்கீடு செய்யும்படி யார் கேட்டது?. அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகளை பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயலாகும்.
இது துரதிர்ஷ்டவசமானது. தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தனது வாழ்நாள், இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை அவரின் விருப்பத்திற்கு முரணானது. இந்த அரசு கலைஞரின் விருப்பத்திற்கு மாறாக செயல்படாது என்று நம்புகிறேன். திருத்தம் செய்வதாக இருந்தால் கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்த கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.