ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற பதற்றங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதும், பாஜ அரசை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஆளுமைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, என்ஐஏ போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு துறைகளை ஏவி விட்டு விசாரணை, சோதனை என்ற பெயரில் முடக்கி நாட்டில் எதிர்கட்சிகளே இல்லாமல் ஆக்கும் பாசிச செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகின்றது.
சிபிஐ அல்லது இதர புலனாய்வு அமைப்புகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. இந்த நிலை இருக்கும் வரை அமலாக்கத்துறை அத்துமீறல் இல்லாமல் ஓரளவு நேர்மையாக செயல்பட்டு வந்தது. ஆனால் 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்களானது அமலாக்கத்துறைக்கு அளவில்லா அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் வழங்கியது.
கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது ஆபத்தானது. மற்றவர்களின் உரிமைகளை மீறி சமூகத்தில் குழப்பங்களையும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இன்றைக்கு அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டார். இதே போல கடந்த 5 நாட்களுக்கு முன்பு கேரள தொழிலதிபர் ஒருவரிடம் இடைத்தரகர்களை நியமித்து ரூ.2 கோடி லஞ்சம் வாங்க முயன்றதாக அமலாக்கத் துறை அதிகாரி மீது அம்மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாட்டில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் அளவுக்கு தங்களை நேர்மை கொண்ட விசாரணை அமைப்பாக காட்டிக்கொள்ளும் அமலாக்கத்துறை தான் இது போன்ற லஞ்ச ஊழல்களில் சிக்கி கேலிக்கூத்தாக்கி வருகின்றது.
அமலாக்கத்துறை விசாரிக்கும் பெரும்பாலான வழக்குகள் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்களை திரட்டி, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்தது என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளன. அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறல்களை அவ்வப்போது உச்சநீதிமன்றம் கண்டித்து வருகின்றது. இந்த சூழலில் தான் டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்துள்ளதோடு டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது வரம்பு மீறிய செயல் எனவும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து விட்டதாகவும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் குட்டு வைத்துள்ளது.
மேலும் அமலாக்கத்துறையானது தனது அதிகார எல்லையை மீறி உள்ளதோடு, முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தாமல் எந்த மூல வழக்கின் அடிப்படையில்
அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது எனவும், ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயற்சிக்கலாம் என கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான அரசியலை செய்வது, எதிர்கட்சிகளை விமர்சிப்பது என்பது பாஜ போன்ற அரசியல் கட்சிகளுக்கு அவசியம் தேவையான ஒன்று. ஆனால் சட்டபூர்வாக செயல்பட வேண்டிய அமலாக்கத் துறையை பயன்படுத்தி அரசியல் செய்வதும், அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதும், அரசியல் செய்வதும், அத்துறைக்கு அழகும் அல்ல, சட்டப்படி ஏற்கத்தக்கதும் அல்ல.