சித்தூர்: அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை கழிவறையில் வீசிவிட்டு தப்பிய தாய் மற்றும் அவருடன் வந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வந்தார். அவருடன் வாலிபர் ஒருவரும் வந்தார். இருவரும் தம்பதி என கூறியுள்ளனர். பின்னர் பிரசவ வார்டில் அந்த பெண்ணை அனுமதித்தனர். சில மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மாலை தாய்-சேய் ஆகியோரை பரிசோதனை செய்ய மருத்துவர் வந்தார். அந்த பெண் இல்லை. தொட்டிலிலும் குழந்தை காணாதது தெரியவந்தது. உடனே அவருடன் வந்த வாலிபரையும் மருத்துவமனை ஊழியர்கள் தேடினர். காணவில்லை.
இந்நிலையில், அந்த வார்டில் உள்ள கழிவறையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் பார்த்தனர். மாயமான பெண் பிரசவித்த பச்சிளம் ஆண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சித்தூர் 2வது போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து மாயமான பெண் மற்றும் அவருடன் வந்த வாலிபரை தேடி வருகின்றனர். அவர்கள் கள்ளக்காதலர்களா? தகாத உறவு மூலம் பிறந்த குழந்தை கழிவறையில் வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும், அவர்கள் யார் என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.