தர்மபுரி: தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணியா தனித்து போட்டியா என்பது குறித்து அறிவிப்போம் என அன்புமணி கூறினார். பாமக தலைவர் அன்புமணி எம்பி தர்மபுரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு, மனித குலத்துக்கே பேரிழப்பு. சாதாரண பாட்டாளி குடும்பத்தில் பிறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு, உலகத் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து ஆசி பெறும் நிலைக்கு உயர்ந்தது தமிழர்களுக்கு பெருமை. அவரது இழப்பு ஈடுகட்ட முடியாதது. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணம் அதிகாரிகள் தான். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளோம். கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர் சமுதாயங்கள்தான் மிகப்பெரிய சமுதாயங்கள். இவ்விரு சமூகங்களும் வளர்ந்தால், தமிழகத்தின் 40 சதவீத மக்கள் வளர்ச்சி பெறுவார்கள். இந்த சூழலில் சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும். தேர்தல் அறிவித்த பிறகே, பாமக தனித்துப் போட்டியா கூட்டணியா என்பது குறித்து தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
* காவல்துறையினர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், காவலர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பதால், அதை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை காவலர்களுக்கும் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோருகின்றனர். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விடுப்பு உள்ளிட்ட காவலர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.