மேட்டுப்பாளையம்: கனமழை காரணமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் சேதமடைந்த தண்டவாள சீரமைப்பு பணி நிறைவு பெற்றது. இதையடுத்து 12 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் துவங்கியது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி இரவு கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பெய்த கனமழை காரணமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததுடன் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, மலை ரயில் சேவை கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணி முடிவடையாததால் கூடுதலாக 2 நாட்கள் என 12 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு 184 பயணிகளுடன் மலை ரயில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. இதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் சென்றனர்.