Saturday, July 12, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு இதய அறுவைசிகிச்சைக்கு பிறகு…

இதய அறுவைசிகிச்சைக்கு பிறகு…

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!

இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது

இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் எவ்வாறு இயல்பு வாழ்க்கையை மீண்டும் உருவாக்குகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.இதயத்திலிருந்து ஆக்ஸிஜனுடன் ரத்தத்தை உடலின் இதரப் பகுதிகளுக்கு எடுத்து செல்லும் ஆர்ட்டிக் பெருநாடி மற்றும் மிட்ரல் வால்வு மற்றும் கரோனரி தமனி பைபாஸ் [aortic, mitral valve, coronary artery bypass procedures] போன்ற மருத்துவ நடைமுறைகள்தான் மிக முக்கியமான இதய அறுவைசிகிச்சைகளாகும்.

வழக்கமான இதய அறுவைசிகிச்சையானது, திறந்த இதய அறுவைசிகிச்சை என்றும் ஒபன் ஹார்ட் சர்ஜரி என்று அழைக்கப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சையில் இதயத்தை அடைவதற்கு மார்பக எலும்பு (ஸ்டெர்னம் – sternum) வழியாக ஒரு பெரியளவில் வெட்டுவதன் மூலமாகவோ அல்லது கீறல் மூலமாகவோ அறுவை சிசிச்சை செய்யப்படும். ஆனால் இன்று, இதயத்தில் அறுவைசிகிச்சை செய்வதற்கு பெரியளவில் வெட்ட வேண்டிய அவசியமோ அல்லது கீறலோ தேவையில்லை.

இதயத்தை அடைவதற்கு மிக குறைந்தளவே ஊடுருவும் வகையில் சிறிய வெட்டு அல்லது கீறல் இருந்தாலே போதுமானது. இந்த குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைசிகிச்சைதான் சமீபகாலங்களில் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சிக்கலான இதய பிரச்சினைகளுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு மட்டும் திறந்த இதய அறுவைசிகிச்சையே தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், குறைந்தபட்ச ஊடுருவும் இதயஅறுவைசிகிச்சையானது பாரம்பரியமாக நாம் மேற்கொண்டு வரும் திறந்த இதய அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும்போது குறைவான ஊடுருவும் மருத்துவ நடைமுறையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.

திறந்த இதய அறுவைசிகிச்சையில், இதயத்தை அடைவதற்கு முதலில் மார்பக எலும்பு பிரிக்கப்படுகிறது. பிறகு இதய-நுரையீரல் இயந்திரம் [heart-lung machine] பொருத்தப்பட, அது அறுவைசிகிச்சையின் போது இதயத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக மேற்கொள்கிறது. இதனால் இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் இதயத்தை முழுவதுமாக பார்க்க முடியும். இப்போது, அவர்கள் நோயாளியின் இதயத்தில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்வது, தேவைப்படும் உள்ளீடுகளை மாற்றாகப் பொருத்துவது மற்றும் பைபாஸ் நடைமுறையை மேற்கொள்வது [repairs, replacements, bypasses] போன்ற மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். பெரியளவிலான கீறல் மூலம் ஊடுருவும் இந்த செயல்முறையின் காரணமாக, குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும்போது நோயாளிகள் மீண்டு வருவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் அதிகமாகிறது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி மற்றும் அசௌகரியமும் பொதுவாகவே அதிகமிருக்கும்..

மறுபுறம், குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைசிகிச்சையின் [minimally invasive surgery] சிறிய கீறல்கள் குறைந்த அளவிலான சிறிய வடுக்களை ஏற்படுத்துகின்றன. மிக நுண்ணிய கேமராக்கள் கொண்ட, மேம்பட்ட சிறப்பு உபகரணங்கள், நோயாளியின் இதயத்தை அடையும் போது இதயத்தின் பகுதிகளைப் பெரிதாக்கப்பட்ட காட்சிளாக மருத்துவக் குழுவினருக்கு காண்பிக்கின்றன. இதனால் அறுவைசிகிச்சை நிபுணர்கள், அவசியமான மருத்துவ நடைமுறையை மிகத் துல்லியமாக மேற்கொள்ள முடியும். மேலும் நோயாளியின் தேவைகளுக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட கருவிகள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் குறைந்தபட்ச திசு சேதத்துடன் நுட்பமான நடைமுறைகளைச் செய்ய உதவுகின்றன.

இந்த குறைந்த ஊடுருவும் அறுவைசிகிச்சையின் பின், நோயாளி வழக்கமான இயல்பு நிலைக்கு வெகு சீக்கிரமாகவே மீண்டெழுவதால், மருத்துவமனைகளில் அதிக காலம் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. திசுக்களின் மீதான பாதிப்பும் குறைந்தளவே இருப்பதால், வலியும் அசெளகரியமும் குறைந்த அளவே இருக்கும். இதனால் அறுவைசிகிச்சைக்குப் பின், நோயாளிகள் தங்களுடைய அன்றாட இயல்புவாழ்க்கைக்கு வெகு விரைவாக திரும்ப முடிகிறது.

ஆனால், இதய அறுவைசிகிச்சையிலிருந்து மீள்வது என்பது, நோயாளி உடல் ரீதியாக குணமடைவது மட்டுமல்ல. பெரும்பாலான நோயாளிகளைப் பொறுத்தவரை, இயல்பு வாழ்க்கைக்கு மீண்டெழுவதில் அவர்களுடைய தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவது, தினசரி வழக்கங்களைப் பழையபடி மேற்கொள்வது மற்றும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை மீண்டும் கண்டுபிடிப்பது போன்ற அம்சங்களும் உள்ளடக்கி இருக்கிறது. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு, நோயாளிகள் உடனடியாக வழக்கமான வார்டுக்குச் செல்வதற்கு முன்பாக, ஒன்று முதல் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சையில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு முதல் நாட்களில், நோயாளிகள் பெரும்பாலும் பலவீனமாகவும், தங்களது தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்து இருப்பதாகவும் உணர்கிறார்கள். இதனால் மருத்துவமனையில் தங்குவது என்பது பொதுவாக ஒரு வாரம் வரை நீடிக்கும், இதற்குப் பிறகு புறநோயாளி பராமரிப்பு [outpatient care] மற்றும் இதய மறுவாழ்வுப் பயிற்சிகள் [cardiac rehabilitation] தொடங்குகின்றன.

நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் முறையாக வடிவமைக்கப்பட்ட இதய மறுவாழ்வு திட்டங்கள், அவர்களது இதயத்தையும், மனதையும் வலுப்படுத்துவதோடு, எழுந்து அமர்வது, ஒரு சில அடிகள் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது என அவர்களின் ஒவ்வொரு மைல்கல்லிலும், இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வழிகாட்டுகின்றன. இதன் மூலம், நோயாளிகள் அறுவைசிகிச்சை முந்தைய தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.

இதய மறுவாழ்வுத் திட்டம் என்பது ஃபிசியோதெரபிஸ்ட்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களால் மேற்பார்வையிடப்படக்கூடிய, ஒவ்வொரு நோயாளிக்குமென தனிப்பயனாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். மென்மையான நடைபயிற்சி மற்றும் சுவாசப் பயிற்சிகள் போன்றவை நோயாளிகளிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் அதே சமயம் இயல்புக்குத் திரும்ப உதவும் பயிற்சிகளுடன் தொடங்குகிறது. மேலும் நுரையீரல் நுகர்வு அளவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவும், சேர்ந்திருக்கும் திரவங்களை நீக்கவும் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

6 முதல் 12 வாரங்களுக்கு மேல், இந்த பயிற்சிகள் மிதமானது முதல் தீவிரமான உடற்பயிற்சிகளாக மாற்றப்படும். அதாவது ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் இப்பயிற்சி மேற்கொள்ளப்படும். அடுத்து நீண்ட காலப் பயிற்சிகளாக, நினைவாற்றல், சுவாசப் பயிற்சிகள் அல்லது மென்மையான யோகா ஆசனங்கள், அவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

இதய அறுவைசிகிச்சையானது, நோயாளிகளிடையே பயம் மற்றும் சோகம் முதல் நிம்மதி மற்றும் நன்றியுணர்வு வரையிலான பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டும். இதய அறுவை சிசிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளில் பாதி நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சைக்குப் பின் ஏற்படும் மனச்சோர்வு அல்லது பதற்றம் ஏற்படுவது பொதுவானது. இப்பிரச்சினைகள் உடனடியாக கவனிக்கப்படாவிட்டால். உடல்ரீதியாக அவர்கள் மீண்டு வருவதை தாமதப்படுத்தும். எனவே, அவர்களுக்கு அளிக்கப்படும் இதய மறுவாழ்வுத் திட்டத்தில் கவுன்சிலிங் மற்றும் மன அழுத்த மேலாண்மைப் பயிற்சிகளுடன் மனநல ஆதரவையும் நாம் வழங்குவது மிகவும் முக்கியம். நோயாளி தங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதில், நம்மால் முடியுமென்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதேபோல் அவர்களின் வாழ்க்கைத் துணையோ அல்லது நெருங்கிய நண்பரோ கூடவே இருந்து உற்சாகப்படுத்துவது, அவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்வதில் ஒரு உந்துதலையும், அவற்றைப் பின்பற்றுவதில் ஒரு பிடிப்பையும் அதிகரிக்கும். இதுவே, நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலனில் நேர்மறையான பலன்களை உருவாக்கும்.

இதய அறுவைசிகிச்சை, பெரும்பாலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் எச்சரிக்கை மணியாக செயல்படுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வாரங்கள் மற்றும் மாதங்களில், சீரான ஊட்டச்சத்து, மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் நடைமுறைகள், பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் மன அழுத்த மேலாண்மை பின்பற்றுவது என வாழ்க்கை முறையில் புதிய மாற்றங்களைக் கடைப்பிடிப்பது நோயாளிகள் தங்களது முழுமையான வாழ்க்கையை முன்னெடுக்க உதவுகிறது.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் புரதங்கள் நிறைந்த உணவு, உப்பு, சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் டயட் மற்றும் ஆன்டிபிளேட்லெட்டுகள், ஸ்டேடின்கள் அல்லது பீட்டா-ப்ளாக்கர்ஸ் [antiplatelets, statins, beta-blockers] போன்ற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்கள் குறிப்பிட்டடி எடுத்துக் கொள்வது போன்றவற்றை நோயாளிகள் உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.

CABG (கரோனரி ஆர்டெரி பைபாஸ் கிராஃப்டிங் அறுவைசிகிச்சைகள் – CABG (coronary artery bypass grafting surgeries))-க்குப் பிந்தைய நீண்டகால ஆய்வுகள், அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கைத் தரம், மீண்டும் வேலைக்குத் திரும்புதல், பொழுதுபோக்குகள் மற்றும் உறவுகளில் புதுப்பிக்கப்பட்ட உத்வேக சக்தியுடன் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றங்களைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றன.

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது மிக மிக முக்கியம்; அறுவைசிகிச்சைக்குப் பிறகு புகையிலை பழக்கத்தை கைவிட்டு அதிலிருந்து வெளியேறும் நோயாளிகள் தங்களது எதிர்கால இருதய பிரச்சினைகளுக்கான அபாயத்தை வெகுவாக குறைத்திருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi