புனே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன (2 வெற்றி, 3 தோல்வி). எனினும், மொத்த ரன்ரேட் அடிப்படையில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நிலையில், மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய ஆப்கானிஸ்தான், யாருமே எதிர்பாராத வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக் கவ்விய இலங்கை அணி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், இரு அணி வீரர்களுமே வெற்றிக்காக வரிந்துகட்டுகின்றனர்.
ஆப்கானிஸ்தான்: ஹஷ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), அப்துல் ரகுமான், அஸ்மதுல்லா உமர்ஸாய், பஸல்லாக் பரூக்கி, இப்ராகிம் ஸத்ரன், இக்ரம் அலிகில், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நஜிபுல்லா ஸத்ரன், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரகமதுல்லா குர்பாஸ், ரகமத் ஷா, ரஷித் கான், ரியாஸ் ஹசன். இலங்கை: குசால் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா, துஷ்மந்தா சமீரா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷான் ஹேமந்தா, திமத் கருணரத்னே, தில்ஷன் மதுஷங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், பதும் நிசங்கா, குசால் பெரேரா, கசுன் ரஜிதா, சதீரா சமரவிக்ரமா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே.