காபூல் : ஆப்கானிஸ்தானில் நேற்று மீண்டும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பல நூறு கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2000 பேர் மரணம் அடைந்தனர். 10000 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் அங்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெராத் தலைநகரில் இருந்து 34 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவானது. பூமிக்கடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் மைதானங்கள், பரந்த சமவெளிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்த கிராம மக்களின் அழுகை சத்தம் ஆப்கான் கிராமங்களில் ஓயாமல் கேட்டுக் கொண்டே உள்ளது. ஆப்கனில் ஹெராத் மாகாணத்தில் உள்ள நைப்ரபி என்ற இடத்தில் நேற்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 1000த்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். உணவு, தண்ணீர், வசிப்பிடம் இன்றி திக்கற்று நிற்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்துள்ளது.