*சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் நேரில் ஆய்வு
ஏர்வாடி : ஏர்வாடி அருகே குளத்தில் கற்களை உடைத்த மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர். வைடூரியம் கிடைக்கும் என்ற ஆசையில் தோண்டுவதற்கு பயன்படுத்திய புல்டோசரை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தை சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகேயுள்ள சமாதானபுரம் கருத்தானேரி குளம் உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.
தற்போது குளத்தில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கிட்டாச்சி டிரில்லிங் மிஷின் மூலம் குளத்தில் இருந்த கற்களை வாலிபர் ஒருவர் தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே களக்காடு மலையில் மர்ம நபர்கள், வைடூரியம் தேடி பாறைகளை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏர்வாடி பகுதியில் குளத்தில் கற்களை மர்ம நபர் உடைப்பதை கண்டு பொதுமக்கள் சந்தேகமடைந்தனர்.
இதுகுறித்து தளபதிசமுத்திரம் விஏஓ முருகம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதில் குளத்தில் கற்களை தோண்டிய நபர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன்(22) என்பதும், அவர் வருவாய்த்துறையின் அனுமதியின்றி கற்களை தோண்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து ஏர்வாடி போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தோண்டுவதற்கு பயன்படுத்திய கிட்டாச்சி டிரில்லிங் மிஷினை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஏர்வாடி குளத்தில் பாறைகளை உடைத்த நபர், சரள் மண் எடுப்பதற்காக தோண்டினாரா? அல்லது குளத்தில் வைடூரியம் உள்ளதா? என்ற நோக்கத்துடன் பாறைகளை உடைத்தாரா?, இந்த குளத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தோண்டுவதற்கு என்ன காரணம்?, மதுரையில் இருந்து வந்த வாலிபர் குளத்தை தோண்டுவதற்கு உள்ளூர் பிரமுகர்கள் யாரும் துணை போனார்களா? யார் சொல்லி இந்த குளத்திற்கு வந்தார்? என்பது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.