பக்தி, நேர்மை, வாய்மை, தியாகம், நட்பு இவ்வாறு பல்வேறு நற்குணங்களைக் கண்களாகப் போற்றி வளர்த்தனர். இவற்றையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்த மனிதர்கள் சிகரம் தொட்டனர். மனிதனுக்கு மனிதன் வழிகாட்டியாகத் திகழ்ந்தனர். அத்தகைய வரிசையில் நின்றவன் ருக்மாங்கதன் என்ற மன்னன். பத்மபுராணத்தில் ஒரு பகுதியாக இவரின் பெருமைகள் பேசப்படுகின்றது. அரிச்சந்திரனுக்கு இணையாக வாழ்ந்தவன். விதிசாபுரி நாட்டை ருக்மாங்கதன் ஆட்சி செய்தான். அவன் ஆட்சி புரிவதைக் காண தேவலோகத்தில் இருப்பவர்கள்கூட விண்ணுலகத்திற்கு வந்து செல்வதுண்டு.
ருக்மாங்கதன், தர்மத்தின்வழி நின்று மக்களைப் பேணினான். அதனால் தர்மத்தின் மறு உருவமாகத் திகழ்ந்தான். திருமாலின் மீது தீவிரமான பக்திகொண்டவன், அறநெறிக்கு உட்பட்டவன். இவனின் மனைவி பெயர் சந்திரவல்லி. கணவனுக்கு ஏற்ற மனைவி. சந்திரவல்லியின் அன்புக்கு உகந்த மகன் தர்மாங்கதன். பெற்றோர்கள் மனம் மகிழ நடப்பவன்.ஒரு நாள், அந்தப்புரத்தில் ராணி சந்திரவல்லி சற்று கோபமாக இருந்தாள். மலர்களைப் பறித்து பூவை கட்டிக்கொண்டிருந்தாள், ராணியின் தாதிப்பெண் அமுதவல்லி. இவள் விளையாட்டுக் குணம் உள்ளவள். சிறுசிறு குறும்புகள் செய்து, ராணியிடம் வகையாக மாட்டிக் கொள்வாள். அப்படித்தான் இம்முறையும் நடந்தது. சீக்கிரமாக பூக்களைக் கட்டி திருமாலுக்கு சாற்ற வேண்டும் அல்லவா? என்றாள் ராணி சந்திரவல்லி.
“மகாராணி, நீ என்ன ஆண்டாளா? உன் மாலைக்காக திருமால் காத்திருக்க.’’ என வாய்த் துடுக்காப் பேசிச் சிரித்தாள். அதைக் கேட்ட ராணிக்கு, சினம் ஏறியது. “அடியே மடச்சிறுக்கி.. நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ எதிர்த்தா பேசுகிறாய்?’’ என்று இரண்டு அடி அவள் முதுகில் வைத்தாள். அடியை வாங்கிய அமிர்தவல்லி, நான் அனாதை என்பதனால் ராணி அடிக்கிறாள் என மனம் நொந்து அழுதபடி அரண்மனை விட்டு வெளியே சென்றாள்.
ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து, திருமாலிடம் வேண்டிக்கொண்டாள். அதே சமயம், திருமால் அருளால் மனம் மாறிய ராணி, மற்றொரு தாதிப் பெண்ணை அனுப்பி, அமிர்தவல்லியை அழைத்து வரச் செய்தாள். அதன் பின்பு ராணியும், அவளும் ராசி ஆயினர்.
தேவலோகத்தில் நறுமணம்
தேவலோகத்தில் இந்திரன், நாரதரிடம் உரையாடினார். திடீரென்று காற்றில் கலந்த நறுமணம் வீசியது. நறுமணம் எங்கிருந்து வருகிறது? என்று இந்திரன், நாரதரிடம் கேட்டான்.
பூலோகத்தில் உள்ள மன்னன் ருக்மாங்கதனின் நந்தவனத்தில் பூக்கும் மலர்களாகும் என்றதும், இந்த மலர்கள் தனக்கு வேண்டும். என் நந்தவனமே காய்ந்துள்ளது. மலர்களே மலர்வதில்லை. இந்த மலர்கள் தேவலோகத்தை அலங்கரித்தால், இழந்த நறுமணத்தை மீண்டும் பெறலாம் எனக் கூறினான் இந்திரன்.
அதற்கென்ன தினமும் பறித்துவந்தால் போயிற்று என்று உபாயத்தைக் கூறினார் நாரதர். அது எப்படி முடியும்? ஆகக்கூடிய செயலைக் கூறும் நாரதரே என்றார் இந்திரன். உன்னுடைய சப்த கன்னிகளை அனுப்பி பறித்துக் கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன் பின்பாக, இந்திரன், ருக்மாங்கதனுடைய தோட்டத்தில் மலரும் அத்தனை மலர்களையும் பறித்துச் சென்றுவிடுவார். இவ்வாறு நடக்கின்றபொழுது, மலர்கள் இல்லாமல் குழம்பினார் மன்னன். பூக்கள் அனைத்தும் எங்கே செல்கிறது என்று புரியாமல் தவித்தான் மன்னன்.
பூவுலகிற்கு நாரதர் வருதல்
ஒருநாள் நாரதர், பூவுலகிற்கு எழுந்தருளி, மன்னரின் அரண்மனைக்கு சென்றார். தன்னுடைய அவையில் அவரை வரவேற்று உபசரித்து, சிம்மாசனத்தில் அமரவைத்தார். பின்பு மன்னர், நாரதரைப் பார்த்து, உம்மிடம் ஒரு வினாவினைக் கேட்க விரும்புகிறேன் என்றார். தாராளமாகக் கேட்கலாம் என்றதும், கேள்வி அல்ல ஆலோசனை என்று கூறலாம் என்று பீடிகையுடன் தொடங்கினார். எம்முடைய நந்தவனத்தில் இருக்கின்ற மலர்கள் அனைத்தும் மலர்கின்றன. ஆனால், பறிக்கும் பொழுது அவைகள் காணாமல் போய்விடுகின்றனவே என்ன காரணம்? இதை யார் கொண்டுசெல்கிறார்கள்? என்பதை நீங்கள்தான் கூற வேண்டும் என்று எடுத்துரைத்தார், மன்னர். இம்மலர்களை எல்லாம் சப்த கன்னிகள் பறித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள் என்றார். என்னது தேவலோக மங்கையரா? விசித்திரமாக இருக்கிறது என வியந்து கண்களை அகற்றி பார்த்தார் மன்னன்.
ஆமாம்!
அந்த தேவகன்னியர்களை நான் பார்க்கலாமா? அவர்களைப் பிடிக்க நான் என்ன செய்ய வேண்டும்? இம்மலர்களைக் கொண்டு செல்லாமல் தடுக்க வேண்டுமே என புலம்பினார், மன்னர். சிந்திப்போம். அதற்கு ஒரு உபாயம் இருக்கிறது என்றார் நாரதர். உபாயத்தை காலம் கடத்தாமல் முதலில் கூறுங்கள் என்று விரைவுப்
படுத்தினார் மன்னர்.
நாரதர் கூறிய உபாயரகசியம்
நான் ஒரு விதையைத் தருகிறேன். அதைப் பயிரிட்டால் தேவலோகக் கன்னியரால் பூமியிலிருந்து மேலுலகம் தப்பிச்செல்ல முடியாது என்ற ரகசியத்தை சொன்னார். சப்த கன்னிகள், பூலோகத்தில் வந்தால் மீண்டும் அவர்களால் தேவலோகம் செல்ல இயலாது? இதனைக் கேட்டு வியந்தார் மன்னர். ஆம்.. இத்தகைய வசியசக்தி உடைய செடிகள் இது என்று கூறியதும், நாரதர் கொடுத்த விதையை பூமியில் நட்டார், மன்னர். சில தினங்களில் நெற்கதிர்கள் போல அந்த புற்கள் வளர்ந்தது. அந்த நந்த வனத்திற்கு காவலாக அவைகள் நின்றன.
தேவ கன்னியர்கள் நந்தவனத்திற்கு வந்து, மலர்களைப் பறித்து, அவர்கள் தேவலோகம் மந்திரம் சொல்லி செல்லும்போது, ஆறு பேர் சென்றுவிட ஒருத்தி மட்டும்
இந்நாட்டில் சிக்கி நின்றுவிடுகின்றாள். என்ன இது சோதனை என்று அவள் பதறுகின்றாள். அவளால் வான்வழி செல்லும் ரகசிய மந்திரம் சொல்லத் தெரியாமல் திகைத்தாள். தேவலோகம் செல்லவே முடியவில்லை.
அச்சமயம், அவள் கையும் களவுமாக பிடிபட்டாள். தேவகன்னியின் கண்ணில் அச்சம் தெரிந்தது. தன்னை காப்பாற்றி தேவலோகத்திற்கு அனுப்பும்படி மன்னனிடம் மன்றாடினாள்.
பரிதாபப்பட்ட மன்னன், உன்னை எப்படி அனுப்புவது என்று தெரியவில்லையே என்றார். “மன்னா, உன்னுடைய நாட்டில் அமிர்தவல்லி என்ற பெண் இருக்கிறாள் அல்லவா? அவள், ஒரு முறை ஏகாதசி விரதத்தைக் கடைப் பிடித்தால், அந்த புண்ணிய பலனை எனக்கு அளித்தால், நான் சென்று விடுவேன்’’ என்று உரைத்தாள். “அவள் எப்பொழுது விரதம் இருந்தாள்?’’ என்று மன்னன் கேட்டார்.
“அரசிடம் கோபித்துக்கொண்டு, ஒரு திண்ணையில் படுத்து திருமாலை நினைத்து பூஜை செய்தாள். அன்று அவள் உணவு உண்ணவும் இல்லை. உறங்கவும் இல்லை. அந்த நாள் ஏகாதசி நாளாகும். ஆகவே, அவளுக்கு அந்த பலன் கிடைத்துள்ளது.’’ என்று கூறினாள். உடனே அந்த பணிப் பெண்ணை அழைத்து, அவளிடம் நடந்தவற்றை எடுத்துக்கூறி, அவளிடம் இருந்த புண்ணியத்தைப் பெற்று, தேவகன்னியிடம் கொடுத்து அவளை தேவலோகம் செல்ல உதவினான் மன்னன். மன்னன், உடனே ஏகாதசி விரதம் பற்றி வசிஷ்டரைக் கேட்டதும், அவர் கூறத் தொடங்கினார்.
“காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை
“ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை’’
அந்த பெண் அறியாமல், ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருந்தாள். அந்த பலனைதான் அந்த தேவலோகப் பெண் பெற்றுச் சென்றாள் என்ற ரகசியத்தைக் கூறினார்.
ஏகாதசி அன்று உண்ணாமல் பெருமாளை எண்ணி பக்திச் சிரத்தையுடன் விரதம் இருந்தால், நாடு செழிப்பாக இருக்கும் என்று வசிஷ்டர் கூறியதும், தூய்மையாக இருந்து விரதத்தை கடைப்பிடிக்க, மக்கள் அனைவருக்கும் ஆணையிட்டார், மன்னன் ருக்மாங்கதன். அவ்வாறே.. மக்கள் அனைவரும் விரதத்தை கடைப்பிடித்து, நோய் நொடி இன்றி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.
எமலோகம் வெறிச்சோடியது
நாட்டில் இருக்கின்ற அத்தனை மக்களும் இந்த விரதத்தை கடைப்பிடித்ததனால், எமலோகம் செல்லக்கூடிய நிலை இல்லாமல், எமலோகமே வெறிச்சோடியது.எமன், அச்சமடைந்தான். தன்னுடைய எம பட்டினத்திற்கு யாரும் வராததால், பணிகள் எல்லாம் தடைசெய்யப்பட்டது. பிரம்மாவிடம் சென்று, இதுபற்றி சொல்ல, “மக்கள் அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து வைகுண்டம் செல்கின்றனர் அதனால் எமபட்டணத்தில் யாருமே வரவில்லை இதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று பிரம்மா கூறினார்.
பிரம்மன் உருவாக்கிய பெண்
பிரம்மா ஒரு பெண்ணை சிருஷ்டித்து பூலோகத்திற்கு அனுப்பினார். மந்திர மலையில் கானம் இசைத்து வாழ்ந்திருந்தாள். மன்னர் ருக்மாங்கதன் வேட்டையாட, தன் பரிவாரங்களுடன் வந்தார். அவளின் தேவகானத்தில் மயங்கி அவளைத் தேடி வந்த ருக்மாங்கதன், அவள் அழகில் மயங்கினான். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட கந்தர்வ முறையின்படி, திருமணம் செய்து கொண்டு, நாட்டிற்கு அழைத்து வருகிறான். மிகவும் நல்லவள் போல் எட்டு ஆண்டுகள் இருந்தாள்.
விரதத்தை எப்படி அழிப்பது என்று சிந்தித்தாள்
மன்னர் இடத்தில், “நீங்கள் மிகப் பெரிய அரசர். இந்த நாளில், நீங்கள் விரதம் இருந்தால் உங்கள் ஜாதகம் ரீதியாக துன்பம் நிகழக்கூடும். ஆகையால் இருக்கக் கூடாது’’. எனத் தடுத்தாள். அரசன், “இந்த விரதம் மகிமையை நான் நன்கு உணருவேன். நான் இருப்பதைவிட நீயும் இதில் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியதும், அதிர்ச்சி அடைந்தாள். அதன் பின்பு, அவள் ஒரு வரம் வேண்டினாள். “உங்களுடைய மகன் தலையை வெட்டிக் கொல்ல வேண்டும்’’ என்றும், “அப்பொழுது இந்த விரதத்தை நான் கடைப்பிடிக்கிறேன்’’ என்றாள். அரசன் அதிர்ந்தான்.
“பாதகியே என் மகன் தலைவெட்டித் தர வேண்டுமா?’’ என்று சினம்கொண்ட மன்னன், “ஆண்டவா… இப்போது புரிகிறது. நான் அழகு என்ற மாயையிடம் சிக்கிக்கொண்டேன். நான் செய்த ஏகாதசி விரதம் உண்மையானால், இந்த அரக்கிக்கு தகுந்த தண்டனையை கொடு.. ஆண்டவா…’’ என முறையிட்டான். சிறிது நேரத்திலேயே அவள் சுக்குநூறாக உடைந்து சிதறினாள். ஹாஹா.. ஏகாதசி விரதப்பலனை என்னவென்று சொல்ல! ஏகாதசி விரதத்தை தொடர்ந்து, மன்னன் ருக்மாங்கதனும், அவனின் நாட்டு மக்களும் கடைப்பிடித்து, அளவில்லா மகிழ்ச்சியில் வாழத்தொடங்கினர். நாமும் மன்னனின் வழியில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து, வளமான வாழ்க்கைக்கு வித்திடுவோம்.
பொன்முகரியன்