சென்னை: கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அடையாறு, பெருங்குடி மண்டல கழிவுநீர் உந்து நிலையங்கள் நாளை செயல்படாது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருங்குடி மண்டலம், கார்பரேஷன் சாலையில் கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 11 மணி முதல் நாளை காலை 11 மணி வரை (24 மணி நேரம்) அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட அடையாறு பழைய கழிவுநீர் உந்து நிலையம், பி.வி.நகர் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட எல்.பி.ரோடு (ராஜிவ்காந்தி சாலை) பழைய கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.
எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன்படி, மண்டலம் – 9 (தேனாம்பேட்டை) பகுதி பொறியாளரை 81449 30909 என்ற எண்ணிலும், துணை பகுதி பொறியாளர்களை 81449 30224, 81449 30225, 81449 30226 ஆகிய எண்களிலும், மண்டலம்- 13 (அடையாறு) பகுதி பொறியாளரை 81449 30913 என்ற எண்ணிலும், துணை பகுதி பொறியாளர்களை 81449 30238, 81449 30239, 81449 30240, 81449 30247 ஆகிய எண்களிலும் தொடர்பு ெகாள்ளலாம்.