திருவள்ளூர்: பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டனர்களை முறையாக பள்ளியில் சேர்ப்பது, மீண்டும் அவர்களை வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைப்பது குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன் முன்னிலை வகித்தார்.
அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி.மோகன் ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக பள்ளியில் சேர்க்க வேண்டும். அதேபோல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோர்களிடத்தில் குழந்தைகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும். சாலையை கடந்து செல்பவர்களை தாங்களே கொண்டு சென்று விட வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். எப்சி செய்யாதவர்கள் உடனடியாக செய்ய வேண்டும். கட்டாயம் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு துறை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.
இல்லையேல் அபராதம் விதிக்கப்படும். அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 12 வயதிற்குள் இருக்கும் மாணவர்கள் 5 பேரை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும். ஏற்றப்படும் அனைத்து குழந்தைகளும் ஆட்டோவிற்குள் இருக்க வேண்டும். கம்பியில் வைத்துக் கொண்டோ, புத்தகப் பைகளை ஆட்டோவுக்கு வெளியில் தொங்கவிட்டுக் கொண்டோ செல்லக்கூடாது. ஓட்டுனர் அருகில் யாரையும் உட்கார வைக்க கூடாது. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதற்கு நீங்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் திருவள்ளூர் நகரில் ஆட்டோ ஓட்டும் 50க்கும் மேற்பட்ட ஓட்டுனநர்கள் கலந்து கொண்டனர்.