காரைக்கால்: கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படுகிறது. கிணற்றை வட்ட வடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது. ஊர் பொதுக்கிணற்றை சுற்றி வட்டமாக மேடை அமைத்திருப்பர். அதில் பஞ்சாயத்து கூட்டுவது, அரசியல் பேசுவது, தூங்குவது நடக்கும்.
மழைநீரை உள்வாங்கி பின் மக்களுக்கே தருகிறது கிணறு. கிணற்றில் நீர் இறைப்பது உற்சாகமான உடற்பயிற்சியாகவும் இருந்தது. மின் மோட்டார்கள் வந்தவுடன் கிணறுகள் இருந்த சுவடே இன்று தெரியாமல் உள்ளது. பல கிணறுகள் மூடப்பட்டு விட்டது. இதனால் கிணற்றின் பயன்பாடு இன்று யாருக்கும் கிடைப்பதில்லை.ஆண், பெண் கிணறு தெரியுமா? இந்த தலைமுறைக்கு கிணற்றை பற்றி பெரியளவில் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்று படிக்கட்டில் அமர்ந்து படிப்பது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள் கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர்.
விவசாய நிலத்தில் இருப்பது ஆண் கிணறு. அதை விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை விட அதிகம் நேசிப்பர். கயிற்றில் மாடுகளை பூட்டி நாட்டுப்புற பாடல் பாடியவாறு கமலை மூலம் ‘சால்’ கிணற்றுக்குள் இறக்கி நீரை வெளியே இறைப்பர். கிணற்றில் நீர்மட்டம் உயர்வது. குறைவதை வைத்தே விவசாயம் செழிப்பா அல்லது வறட்சியா என்று விவசாயிகள் முடிவு செய்வர்.
வீட்டின் பின்புறம் இருப்பது பெண் கிணறு. தண்ணீர் இறைத்து பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணி துவைத்தல், ஏகாந்த மனநிலையில் பாடுதல், அழுதல் என பெண்களின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் தோழி தான் கிணறு. தற்போது கிணறுகளை வருங்கால சந்ததியின் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.