* கூட்டாளியுடன் ஆந்திராவில் சிக்கினார்
* தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு அதிரடி
சென்னை: அத்வானி ரதயாத்திரையின் போது பைப் வெடி குண்டு வைத்த வழக்கு, இந்து முன்னணி அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்த வழக்கு மற்றும் மத ரீதியான படுகொலை வழக்குகளில் கடந்த 30 ஆண்டுகளாக மாறுவேடங்களில் தலைமறைவாக சுற்றி வந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான மற்றொரு தீவிரவாதி முகமது அலியை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திராவில் கைது ெசய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்ய முதலி தெருவில் இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் 1995ம் ஆண்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அலுவலகம் தரைமட்டமானது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அப்போது அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான அபுபக்கர் சித்திக் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவு குற்றவாளியாக அப்போது அறிவிக்கப்பட்டார்.
1995ம் ஆண்டில், நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் முத்து கிருஷ்ணன் வீட்டிற்கு தபால் மூலம் புத்தக வெடிகுண்டு பார்சலை அபுபக்கர் சித்திக் அனுப்பினார். இதில் முத்து கிருஷ்ணன் மனைவி தங்கம் குண்டு வெடித்து உயிரிழந்தார். பிறகு, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஜெகவீரபாண்டியனுக்கு ‘புத்தக வெடி குண்டு’ பார்சல் தபால் மூலம் அனுப்பினார்.
தபால் நிலையத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் ஜெகவீரபாண்டியன் உயிர் தப்பினார். இந்த வழக்குகளில் அபுபக்கர் சித்திக் கைது செய்யப்படவில்லை. 1999ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், திருச்சி, கோவை, கேரளா என 7 இடங்களில் வெடி குண்டுகள் வைத்த வழக்குகள் அபுபக்கர் சித்திக் மீது உள்ளன. கோவையில் 1998ம் ஆண்டு 19 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. 58 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட அல் உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்களை தமிழ்நாடு போலீசார் வேட்டையாடினர். ஆனால் அந்த இயக்கத்தை முன்நின்று இயக்கிய நபர்களில் முக்கிய நபரான அபுபக்கர் சித்திக் கைது செய்யப்படவில்லை. போலி பாஸ்போர்ட் மூலம் கத்தாருக்கு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அபுபக்கர் சித்திக் சர்வதேச தீவிராதிகளுக்கு ஈடாக தன்னை வளர்த்துக்கொண்டார். 2000ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். பிறகு அமைதியான நபர் போல், இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். அவருக்கு குழந்தைகளும் உள்ளது.
அந்த நேரத்தில் பாஜ தலைவர் அத்வானி ஊழலை எதிர்த்து இந்தியா முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டார். அபுபக்கர் சித்திக், தனது சகாக்கள் உதவியுடன், இமாம் அலியின் ஏ.எம்.எப். என்ற பெயரில் தீவிரவாத அமைப்பை மீண்டும் தமிழகத்தில் தொடங்கி அதற்கு ஆட்களை சேர்த்தார். 2011ம் ஆண்டு அத்வானியின் ரதயாத்திரை தமிழகம் வந்தது. மதுரை திருமங்கலம் பகுதிக்கு வரும் போது, அத்வானியை படுகொலை செய்ய அபுபக்கர் சித்திக் பாலத்தின் கீழ் வைத்த பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு 2012ம் ஆண்டு வேலூரில் பாஜ மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை, சேலம் பாஜ பிரமுகரான ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, பரமக்குடியில் முருகன்(எ) முருகேசன், மதுரையில் சுரேஷ் என அடுத்தடுத்து படுகொலைகளை அபுபக்கர் தனது சகாக்கள் உதவியுடன் நடத்தினார்.
இந்த தொடர் படுகொலைக்கு பிறகு அபுபக்கர் சித்திக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தேடப்படும் குற்றவாளியாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்தது. இவர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் அபுபக்கர் சித்திக் தவிர போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அதன் பிறகு பெங்களூருவில் பாஜ அலுவலகம் முன்பு குண்டு வெடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அந்த மாநில அரசு அபுபக்கர் சித்திக்கை அறிவித்தது. இதற்கிடையே வடமாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் அபுபக்கர் சித்திக்கை மும்பை போலீசார் ஒரு முறை கைது செய்துள்ளனர்.
அவரை கைது செய்த போது, அபுபக்கர் சித்திக்கு 53 வயது. போலீசாரிடம் அபுபக்கர் சித்திக்கின் 20 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் உள்ளது. அதை வைத்து தான் அபுபக்கர் சித்திக்கை அடையாளம் காண முடியாமல் மும்பை போலீசார் விடுவித்துள்ளனர். அதன் பிறகு அபுபக்கர் சித்திக் தனது குடும்பத்துடன் வசித்து கொண்ேட தமிழகம் உட்பட நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2022 அக்டோபர் 23ம் தேதி கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக ‘தீவிரவாத தடுப்பு பிரிவு’ ஒன்று தனியாக உருவாக்கி உத்தரவிட்டார். இப் பிரிவின் தொடர் விசாரணையின் பயனாக, அபுபக்கர் சித்திக்கை, தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல மாதங்கள் முகாமிட்டு பல்வேறு வேடங்களில் சுற்றிவந்து பொறி வைத்து நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கைது செய்தனர்.
தீவிரவாதி அபுபக்கர் சித்திக்குடன் சென்னை விக்டோரியா அரங்கில் குண்டு வைத்த வழக்கு, 1999ம் ஆண்டு தமிழகம் மற்றும் கேரளா என 7 இடங்களில் வெடி குண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தீவிரவாதியான திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது அலி என்பவரையும் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலியை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கர்நாடகா காவல்துறையும் 2013ம் ஆண்டு பெங்களூருவில் பாஜ அலுவலகம் முன்பு குண்டு வெடித்த வழக்கில் கைது செய்து விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறையிடம் அனுமதி பெற ஐஜி ஒருவர் தலைமையில் சென்னைக்கு வந்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.