Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடலுக்குள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்; அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் சோதனை வெற்றி: டிஆர்டிஓ, கடற்படை சாதனை

மும்பை: கடலுக்குள் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் வகையில் அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிஆர்டிஓ, இந்திய கடற்படைக்கு ஒன்றிய அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து கடலுக்குள்ளேயே அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தீவிரம் காட்டி வந்தது. இந்த முயற்சியின் பயனாக, அதிக தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பை டிஆர்டிஓ உருவாக்கியது. இந்தியக் கடற்படை மற்றும் சில தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த சக்திவாய்ந்த ஆயுதம் வடிவமைக்கப்பட்டது.

இந்த அதிநவீன ராக்கெட் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ‘ஐஎன்எஸ் - கவரட்டி’ போர்க்கப்பலில் இருந்து, விரிவாக்கப்பட்ட தாக்குதல் வரம்பு கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளின் சோதனைகள் ஜூன் 23 முதல் ஜூலை 7 (நேற்று முன்தினம்) வரை நடைபெற்றன. இந்த சோதனைகளின் போது, மொத்தம் 17 ராக்கெட்டுகள் வெவ்வேறு தொலைவுகளில் உள்ள இலக்குகளை நோக்கிச் செலுத்தப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டன. இந்த ராக்கெட்டுகளில் உள்ள இரட்டை ராக்கெட் மோட்டார் அமைப்பு, தொலை தூரத்தில் உள்ள இலக்குகளை மிக அதிக துல்லியத்துடனும், நிலைத்தன்மையுடனும் தாக்கக் கூடியது. இந்த சோதனைகளின் மூலம், ராக்கெட்டின் தாக்குதல் வரம்பு, இலக்கை அடையும் நேரம் மற்றும் வெடிமருந்தின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து முக்கிய நோக்கங்களும் வெற்றிகரமாக எட்டப்பட்டதாக இந்தியக் கடற்படை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமான டிஆர்டிஓ, இந்தியக் கடற்படை மற்றும் இப்பணியில் ஈடுபட்ட தொழில் நிறுவனங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த ராக்கெட் அமைப்பின் வெற்றி, இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறனை பன்மடங்கு அதிகரிக்கும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியானது, ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் தற்சார்புப் பாதுகாப்புத் திறனில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.