ஆவடி: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி காமராஜர் நகர், ராமலிங்கபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (37). ஆவடி சந்தையில் உள்ள பூக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, அதே சந்தையில் பணிபுரிந்து வந்த ராஜேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜேஸ்வரியின் அண்ணன் சரவணன் இறந்ததையடுத்து அவரது மனைவி அமுதாவுடன் சுந்தரம் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதையடுத்து, அமுதாவுக்கு, ஆவடி கவுரிபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான திவான் முகமது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சுந்தரம், தன்னுடன் வந்து வாழ வேண்டும் என அடிக்கடி அமுதாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா, சுந்தரத்தை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த 2017 செப்டம்பர் 7ம் தேதி, திவான் முகமது, அவரது நண்பர் கோபிநாத், அமுதா மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் ஒன்று சேர்ந்து, திவான் முகமது வீட்டிற்கு சுந்தரத்தை வரவழைத்தனர். பின், சுந்தரத்தை கத்தியால் குத்தி கொலை செய்து, அங்கேயே குழி தோண்டி புதைத்து தரைக்கு வர்ணம் பூசியுள்ளனர். அன்று இரவு சுந்தரத்தை காணவில்லை என அவரது தாய் யசோதா ஆவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த ஆவடி போலீசார், மொபைல் டவர் வாயிலாக திவான் முகமது வீட்டை தேடிச் சென்று, அங்கு மறைந்திருந்த 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு தொடர்பாக ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், கடந்த 2 ஆண்டுகளாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்தது. இதில், முதல் குற்றவாளியான திவான் முகமது (43) என்பவருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்ததற்காக கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். மற்ற மூவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.