புதுடெல்லி: வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வி தொடர்பான சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா மாநிலங்கள் சிறந்து விளங்குவதாகவும், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகியவை பின்தங்கியிருப்பதாகவும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு (எப்எல்என்ஏடி) முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் படித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகிய மூன்று பாடங்களில் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடமும் தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக இது நடத்தப்படும். தேர்வில் பங்கேற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு ஜூலை முதல் கடந்த மார்ச் வரை 2 கட்டங்களாக தேசிய எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் 5 லட்சத்து 9,694 பேர் தேர்வு எழுதிய நிலையில், 100% பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல திரிபுரா மாநிலத்தில் 14,179 பேர் தேர்வெழுதி 13,909 பேருக்கு (98.1 சதவீதம்) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் 7,959 பேர் தேர்வு எழுதி 7,901 பேருக்கு (99.3 சதவீதம்) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, உத்தரகாண்ட், குஜராத், இமாச்சல் போன்ற மாநிலங்களில் பங்கேற்பாளர்கள் குறைவாக இருந்த போதிலும் சான்றிதழ் வழங்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. உத்தரகாண்டில் 85.7 சதவீத தேர்வர்களுக்கும், குஜராத்தில் 87.1 %, இமாச்சலில் 88.3% பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எப்எல்என்ஏடி தரவுகள் தெரிவிக்கின்றன.