சென்னை: வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு தமிழகத்தில் அடிப்படை எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், தமிழகத்தில் 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுதறிவுத் திட்டம் கடந்த 2022-2023ம் ஆண்டு முதல் அனைத்து 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 2025-2026ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 100சதவீதம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, 2024-2025ம் ஆண்டில் எழுதப் படிக்க தெரியாதோர் அனைவரையும் 100 சதவீதம் கண்டறிய, விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்து 113 தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 5 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 632 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக அமைந்தகரை சுப்புராயன் தெருவில் இயங்கும் 3 சென்னைப் பள்ளிகள், எம்ஜிஆர் நகர் சென்னை நடுநிலைப் பள்ளி, அமைந்தகரை மஞ்சகொல்ைல பகுதியில் உள்ள சென்னை பள்ளி, நேருபார்க் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் உள்ள புல்லாபுரம் சென்னை பள்ளிகள் என 632 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 13 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர்.