திருமலை: தெலங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டம், நரசிம்ஹுலாபேட்டா மண்டலத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். தனியார் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போதெல்லாம் வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கொடுமை தாங்காமல் கடந்த இருநாட்களுக்கு முன்பு, மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மாணவியை உடனடியாக மீட்டு மஹபூபாபாத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் நேற்று சகோதரர்களிடம் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது. மாணவி, தன் தம்பிக்கு ராக்கி கட்ட நினைத்தார். தொடர்ந்து, காலையில் மாணவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அவரது தம்பியை அழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த தம்பிக்கு மாணவி ராக்கி கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து தன் அன்பைக் காட்டினாள். மேலும், அப்பா, அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய சிறிது நேரத்தில் மாணவி தன் உயிரை விட்டார். தான் சாகப்போகிறேன் என்று மாணவிக்கு தெரிந்து, தம்பிக்கு கடைசியாக ராக்கி கட்டியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.