நன்றி குங்குமம் டாக்டர்
உண்ணும் கோளாறுகள் பரக்க பரக்க உண்ணுதல்
பரக்க பரக்க உண்ணும் தவறான பழக்கம் என்பது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதலாகும். குழந்தைப் பருவம் முதல் இப்பழக்கம் ஏற்பட்டாலும் பெரியவராகும் வரை உணரப்படுவதில்லை. இதனால் எடை அதிகரித்தல் அல்லது உடல் பருமனாதல் போன்றவை ஏற்பட்டு, அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், ஹைப்பர் கொலஸ்டீரோலிமியா (hypercholesterolemia) மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (type II diabetes) போன்றவை ஏற்பட ஏதுவாகிறது.
அடிக்கடி உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பதால் சீரற்ற முறையில் எடை அதிகரித்தல் அல்லது எடை குறைதல்.பசியாக இருக்கும்போது மட்டுமே உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் அல்லது அதிக அளவு உணவை உண்டு அவதிப்படுதல் அல்லது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதல்.விழாக்கள் மற்றும் விருந்து போன்ற சமயங்களில் உண்ணாமலிருத்தல் அல்லது மற்றவர்களின் முன்பு குறைவாக உண்ணுதல்.
உடல் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுதல் அல்லது தன் உடலமைப்பு சார்ந்த மன உணர்வுகளை அதிகமாக கொண்டிருத்தல் அல்லது அவ்வுணர்வுகளால் அதிகமாக பாதிக்கப்படுதல் போன்ற உணவுப் பழக்கங்கள் இவர்களுக்கு ஏற்படும்.இப்பழக்கத்தினால் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள்.மனசோர்வு (depression), தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு, குற்ற உணர்வு, அவமானமடைதல்.உண்ணும் போது தன்னை கட்டுப்படுத்தி கொள்ள இயலாத நிலை மற்றும் பரக்க பரக்க உண்ணுதலைத் தவிர்க்க இயலாத நிலை. தன் உணவு, உடல், உடல் எடை பற்றி ஏற்கனவே தீர்மானித்துள்ள மனநிலை.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோசனை கூற வேண்டியது மிக அத்தியாவசியமானது.
அனரக்சியா நர்வோசா
இவ்வுணவு உண்ணும் கோளாறில், உணவு உண்ண மறுத்தலும், எடை குறைதலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. குமரப் பருவத்து பெண்கள் சமூக அழுத்தத்தாலும், தன்னுடலமைப்பு பற்றிய உள்ளுணர்வுகளை அதிகமாக கொண்டிருப்பதாலும் உணவு உண்ணுதலைத் தவிர்க்கின்றனர்.தசைகளின் இழப்பால் (emaciated) எடை குறைந்து, மிக மெலிந்த தோற்றமுள்ளவராக காணப்படுவர். அது மட்டுமின்றி, குமட்டுதல், வாந்தி அல்லது உணவு உண்ட பின் உடல் ஊதுதல் (bloating) போன்ற உபாதைகளினால் அவதிப்படுவர். பெண்கள் மாதவிடாய்
ஏற்படாமல் அல்லல்படுவர்.
இத்தகைய சீர் குலைவில் அவதிப்படுபவர்கள் உண்ணாமல் இருத்தல், பசியுணர்வை மழுங்கடித்தல் அல்லது மிக குறைந்த உணவை உண்ணுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவர். இறைச்சி, பால் போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைத் திட்டவட்டமாக (rigidly) தவிர்த்துவிடுவர்.மேலும் கடின உடற்பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். உணவு உண்ணும் போது வித்தியாசமான நடத்தையைக் கொண்டிருப்பர். அதாவது உண்பதற்குச் சில குறிப்பிட்ட வகை பாத்திரங்களையோ, (Special utensils) உணவினை மிக துல்லியமாக வெட்டியோ அல்லது மிக சிறிய கரண்டிகளையோ பயன்படுத்துவர்.
புலிமியா நர்வோசா
இவ்வுணவுக் கோளாறு ‘அனரக்சியா நர்வோசாக்கு முற்றிலும் எதிர்மாறானது. இதில் பரக்க பரக்க உண்ணுதலும், உடனே வாந்தி எடுத்துவிடுதலும் (purging), உணவினைப் பற்றிய இயற்கைக்கு மாறான எண்ணங்களை கொண்டவர்களாகவும் இருப்பர்.குமரப்பருவத்தினர், இச்சீர்குலைவினால் பாதிக்கப்பட்டு அதிக அளவு உணவை, பரக்க பரக்க உண்ணுவதால் ஏற்படும் விளைவுகளாவன,
*பற்களின் மேல் பூச்சான இனாமல் அரிக்கப்படுதல்.
*பற்குழிகள்.
*உப்பிய கன்னங்கள்.
*கைகளின் பின்புறம் காய்ப்பு காய்த்தல் (Callus).
*சோர்வுறுதல் மற்றும் ஊட்டச்சத்து குறைவினால் வலுவுற்றிருத்தல்.
*ஒழுங்கற்ற மாதவிடாய்.
*உணவூட்டம் தொடர்பான பிரச்னைகள்.
ரத்த சோகை
தற்கால போக்கு (trend), சமூகத்தின் செல்வமிக்க, உயர் மட்ட குமரப்பருவத்தினர் மற்றும் கிராமப்புறத்திலுள்ள குமரபருவத்தினருக்கு இளம் வயதிலேயே முதல் தீட்டுசுற்று (menarche) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இச்சமுதாயத்தில் எல்லா பிரிவினரையும் சார்ந்த சுமார் 20 முதல் 25 சதவீத குமரப்பருவப் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறப் பெண்களுக்கு ஆராக்கியமான உணவுகள் கிடைக்காமையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவினைப் பற்றிய விருப்பு, வெறுப்புகள் மற்றும் உணவு உண்ணும் சீர்குலைவுகள் இரத்த சோகைக்கு வழி வகுக்கின்றன.
உடல் பருமனாதல்
மொத்த குமரப்பருவத்தினரின் எண்ணிக்கையில் 10 முதல் 20 சதவீதத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை விட உடற்பயிற்சியின்மையே இதற்கு காரணமாக அமைகிறது. தங்கள் தோற்றத்தைப் பற்றிய அக்கறையினால் குமரப்பருவத்தினர் விளையாட்டு மற்றும் பந்தயங்களில் பங்கேற்பதில்லை. ஹார்மோன்களின் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் குடும்ப பழக்கங்களும் உடல் பருமனாதலுக்கு காரணிகளாக அமைகிறது.
முகப்பருக்கள் தோன்றுதல்
பொதுவாக எல்லா குமர பருவத்தினருக்கும் முகப்பருக்கள் தோன்றுகின்றன. 13 வயது முதல் 19 வயதுடைய குமர பருவத்தினரில் 80 சதவீதம் பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். முகப்பருக்களுக்கும், உணவுக்காரணிகளுக்கும் உறுதியான தொடர்பு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. ஆனால் குமரப்பருவத்தினர் கலோரிகளை மட்டுமே தரவல்ல உணவுகளான கொட்டைகள், சாக்லேட்டுகள், பீட்சா (pizzas), சிப்ஸ் (Chips), மிட்டாய்கள் போன்றவற்றைத் தவிர்த்து திட்டமிட்ட சீருணவை உண்ணும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகப்பருக்கள் தோன்ற முக்கிய காரணி, தோலிலுள்ள செபேசியஸ் சுரப்பி (sebaceous எண்ணெய் சுரப்பி) அதிகமாக செயல்படுவதேயாகும். இச்சுரப்பியில் அடைப்பு ஏற்படுமானால் நோய் தொற்றாக மாறி, குறிப்பிட்ட இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் புண்ணாக (leision) மாறுகிறது.
13 வயது முதல் 19 வயதுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைகள் தாயின் மரணவிகிதமும் (morbidity rate) சிசு மரண விகிதமும் (infant mortality rate) அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மேற்குறிப்பிட்ட வயதில் கர்ப்பம் தரிப்பவர்கள் அதிக ஆபத்து நிலையில் (high risk) உள்ளவராக கருதப்படுகிறார்கள். உடலியல் ரீதியாக முதிர்ச்சி அடையாததால், இந்த வயதில் கர்ப்பம் தரித்தல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து குறைவு ஏற்படும் போது இளம் கர்ப்பிணியின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் குழவியின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கர்ப்பம் பாதிக்கப்பட்டு சரியாக பாலூட்டாததினால் இளம் குழவியும் பாதிக்கப்பட்டு சிசு மரண விகிதமும் அதிகரிக்கிறது.குமரப் பருவத்தினர் நல்ல உணவூட்டமும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டால், பெரியவராகும்போது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுப்பர்.
தொகுப்பு: லயா