கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஓரினசேர்க்கைக்கு உடன்படாத வாலிபரை போதை மருந்து கொடுத்து கொலை செய்து வீட்டில் சடலத்தை புதைத்த நாட்டு வைத்தியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் அசோக்ராஜ் (27). டிரைவரான இவர், திருமணமாகாத நிலையில் தனது பாட்டி பத்மினி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அசோக்ராஜ், வீடு திரும்பவில்லை. இதனால் அசோக்ராஜின் பாட்டி பத்மினி, கடந்த 15ம்தேதி சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அசோக்ராஜின் செல்போனை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனையடுத்து போலீசார் அசோக்ராஜ் சென்று வந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், அவர் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சியில் உள்ள கீழத்தெருவிற்கு செல்வது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் அசோக்ராஜிற்கு நெருக்கமாக இருந்த கேசவமூர்த்தி (50) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். கேசவமூர்த்தி கடந்த 5 வருடங்களாக நாட்டு வைத்தியம் செய்து வந்துள்ளார். உடல் நிலை சரியில்லாத அசோக்ராஜ், இவரிடம் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கேசவமூர்த்தி, ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவர். இதனால் தன்னிடம் வைத்தியம் பார்க்க வரும் இளைஞர்களிடம் பேசி தகாத உறவு கொண்டுள்ளார். இதற்கு அசோக்ராஜ் உடன்படாததால், போதை மருந்தை கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதில் அசோக்ராஜ் இறந்து விட்டார்.
இதை மூடி மறைப்பதற்காக தனது வீட்டிலேயே அவரது உடலை குழி ேதாண்டி புதைத்து உள்ளார். தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, ‘அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவதால் சோழபுரத்தை சேர்ந்த கேசவமூர்த்தி என்ற வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் இறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம்’ என அசோக்ராஜ் எழுதியது போல கடிதம் ஒன்றை தபால் மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கேசவமூர்த்தி கூறிய இடத்தில் ஆய்வு செய்வதற்காக தடயவியல்துறையினர் மற்றும் மோப்பநாய் சோழன் வரவழைக்கப்பட்டது.
இடத்தை கண்டுபிடித்ததும் அங்கு கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஷ்வரன் முன்னிலையில் போலீசார் உடலை தோண்டி எடுத்தனர். கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலானதால் அசோக்ராஜ் உடல் அழுகி இருந்தது. இதனால் அங்கேயே பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிந்து வைத்தியர் கேசவமூர்த்தியை கைது செய்தனர். கேசவமூர்த்திக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இருவருமே அவரை விட்டு சென்ற நிலையில் யார் யாருடன் அவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்பது குறித்தும், அசோக்ராஜ்போல வேறு இளைஞர்கள் யாரையும் கொலை செய்து புதைத்து உள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.