சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாஜகவுக்கு என்றுமே பகல் கனவுதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். விரக்தியில் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். அண்ணாமலை ஒரு விட்டில்பூச்சி. அதிமுக ஒரு ஆலமரம். அண்ணாமலை ஒரு கம்பெனியின் மேலாளர். அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?. அதிமுகவைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள்.எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அண்ணாமலையால் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாஜகவுக்கு என்றுமே பகல் கனவுதான்.
அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது” என்று கூறியுள்ளார். இதனிடையே அண்ணாமலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்தள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக – பாஜக தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.