Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை பற்றி எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? : ஐகோர்ட் கேள்வி

சென்னை :அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை பற்றி எப்போது உத்தரவு

பிறப்பிக்கப்படும்? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிப்பதை எதிர்த்து ஈபிஎஸ் மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்ற மனுவுக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த அதிகார வரம்பு உள்ளதா என்பது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி தரப்பில் புதிய மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், " ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து 7 வாரம் கடந்தும் அதிகார வரம்பு பற்றி ஆணையம் முடிவு எடுக்கவில்லை. 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. விசாரணையை தொடங்காதது தேவையில்லாத தவறான தகவல்களை பரப்ப வழிவகுக்கும். ஆகவே ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,"இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயன், தேர்தல் நெருங்க உள்ள நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இதையடுத்து, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.