காங்கேயம் : காங்கயம் அருகே கூலி தொழிலாளி வீடு சேதப்படுத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட நெய்க்காரன்பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 14 ஆண்டுக்கு முன்பு சிவா (60) என்பவருக்கு அந்த ஊர் மக்கள் ஆதரவின் பேரில் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீட்டில் சிவா குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தில் குடியிருக்க வேண்டாம் என சிவாவை ஊர் மக்கள் சார்பில் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் சிவா வீட்டை காலி செய்யவில்லை. இதனால் அவரது வீடு கடந்த 8ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி, அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் சார்பில் காங்கயம் பகுதி முழுவதும் நேற்று பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘‘இது, தமிழ்நாடா? அரியானாவா? சலவை தொழிலாளி வீடு இடித்து தகர்ப்பு, அதிமுக ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ் உள்ளிட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய். சமூக நீதிக்கு எதிரான சாதி பஞ்சாயத்தை தடை செய்’’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.