சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜ கூட்டணி அமைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பாகவும், அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிமுக கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பல விதத்தில் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் தங்கியிருந்த போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், தற்போது மருத்துவர்களின் கவனிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல், உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.