சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5050 இடங்களும், ஒரு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3,400 இடங்களும், 3 மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்களும் என மொத்தம் 9050 இடங்கள் உள்ளன. அதேபோல் பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்) 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1,950 இடங்களுமாக மொத்தம் 2,200 இடங்கள் உள்ளது. இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குஎ எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கு 851 இடங்களும், பி.டி.எஸ் படிப்புக்கு 38 இடங்களும் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.
இதில், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களில் மட்டும், ஒன்றிய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான 10% (இ.டபிள்யூ.எஸ்) இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதேபோல, தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம், தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் அரசு மருத்துவ கல்லூரி, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 31ம் தேதி அன்று தொடங்கியது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வந்தனர். ஆகஸ்ட் 8ம் தேதி விண்ணப்ப பதிவு செய்வதற்கு இறுதி நாள் ஆகும். கலந்தாய்வுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அரசு ஒதுக்கீட்டுக்கு பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ஆகும். அதேநேரம் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். இந்நிலையில் விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதல் நேற்று மாலை நிலவரப்படி, 25 ஆயிரத்து 209 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளதாக மருத்துவ கல்வி மாணவர் தேர்வு குழு தெரிவித்தது. இவர்களில் 17 ஆயிரம் பேர் அரசுக் கல்லூரிக்கும், 8 ஆயிரம் பேர் தனியார் கல்லூரிக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு வருகிற 14ம் தேதி ஒன்றிய அரசு முதற்கட்டமாக தொடங்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வருகிற 21ம் தேதி மருத்துவத் தேர்வுக்குழு மூலமாக முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இக்கலந்தாய்விற்கான தகுதி பட்டியல் வரும் 19ம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. ஆகஸ்ட் 21ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியவுடனேயே 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு பட்டியல், முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகின்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய நாட்களில் நேரடியாக நடத்தப்பட உள்ளது. பின்னர் பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்.
* 9050 தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கான மொத்த இடங்கள்
* 2,200பல் மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்கள்