சென்னை: 2024-25ம் கல்வியாண்டுக்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவம், பட்டமேற்படிப்பு ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, 2024-25ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். தகுதி உள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106 எனும் முகவரிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் தபால், கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வந்து சமர்ப்பிக்கலாம். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தின் தேர்வுக்குழுவால், நடத்தப்படும் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். தற்காலிக நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள் www.tnhealth.tn.gov.in எனும் பக்கத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.