*2ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
நாகர்கோவில் : நாகர்கோவில் கலை அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 2 ஷிப்ட்டுகளாக வகுப்புகள் நடக்க உள்ளன. இந்த ஆண்டு 1000த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாட பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் முடிவடைந்தது. 2ம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
முதற்கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை கிடைக்க பெறாத மாணவர்கள், விண்ணப்பம் செய்தும் முதற்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவ, மாணவிகளும் 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம். www.gascnagercoil.in என்ற இணைய தள முகவரியில் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம். கல்லூரி முதல்வர் சுசீலாபாய் மேற்பார்வையில் நடந்த கலந்தாய்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்க வந்து இருந்தார்கள்.
கடந்த ஆண்டு நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 625 மாணவ, மாணவிகள் தான் சேர்க்கப்பட்டனர். இந்த கல்வியாண்டு முதல் கூடுதல் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டில் கூடுதலாக சுமார் 400 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு மொத்த மாணவ, மாணவிகள் சேர்க்கை 1,074 ஆக அதிகரிக்கிறது.
இதனால் ஷிப்ட் முறையில் இந்த கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பி.காம், பிபிஏ, பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி. இயற்பியல், பி.எஸ்.சி. விலங்கியல், பி.ஏ. பொருளியல், பி.ஏ. வரலாறு, பி.எஸ்.சி. புள்ளியியல், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. தாவரவியல் ஆகிய 12 படிப்புகள் உள்ளன. இதில் அதிகமாக பி.காம், பிபிஏ, பி.ஏ. ஆங்கிலம், தமிழ், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி விலங்கியல் ஆகிய 7 படிப்புகளுக்கு அதிகமாக மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கிறார்கள்.
எனவே இந்த 7 படிப்புகளுக்கும் முதல் ஷிப்ட், 2 வது ஷிப்ட் என மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடக்கும். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் கூடுதல் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், வெளி மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கி குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் செல்லாமல் அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே படிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது என பேராசிரியர்கள் கூறினர்.
எம்.பி.சி., எஸ்.சி. கோட்டா
கல்லூரி முதல்வர் சுசீலாபாய் கூறுகையில், ஷிப்ட் முறையில் இந்த ஆண்டு முதல் வகுப்புகள் நடக்க இருக்கிறது. எம்.பி.சி., எஸ்.சி. கோட்டா இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 3ம் கட்ட கலந்தாய்வுக்கும் விண்ணப்பங்கள் விரைவில் பெறப்படும். இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.