சென்னை: ஹேமா கமிட்டி விவகாரம், தென்னிந்திய சினிமாவில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ் நடிகைகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து நடிகை ஷகீலா கூறியிருப்பதாவது: மலையாள திரையுலகில் இருப்பது போல தமிழிலும் இந்த பிரச்னை உள்ளது. குறிப்பாக தெலுங்கில் இதைவிட அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்தியை பொறுத்தவரை, அப்படி அல்ல. அவர்கள் எடுத்த உடனேயே நண்பர்களாக மாறிவிடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்னை இருக்காது.
ஆனால் அங்கு நெப்போடிஸம் பிரச்னை உள்ளது. அதாவது புதிய நடிகர்களை யாரையும் வளர விடாமல், தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக முயற்சிப்பது போன்ற பிரச்னை உள்ளது. தென்னிந்திய சினிமாவில் எல்லாம் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்னைகள் உள்ளது. இவை அனைத்தும் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு தான் செய்யப்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும், தனக்கும் அட்ெஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் இயக்குனர்கள் பேசி விடுவார்கள்.
இதற்கு ஒப்புக்கொண்டு தான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். அதனால் நடிகைக்கும் இதில் பங்கு இருக்கிறது. முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்றமுடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக தான் பல பிரச்னைகள் வருகிறது. மேலும் சிலர் வாய்ப்பு தருவதாக சொல்லி, நடிகையை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைப்பர். நடிகையும் போவார். ஆனால் வாய்ப்பு தர மாட்டார். அப்போதுதான் இந்த விவகாரம் வெளியே வரும். இவ்வாறு ஷகீலா கூறினார்.