சென்னை: மலையாள திரையுலகம் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் நடிகர்களுக்கு பாலியல் சீண்டல்களும் அட்ஜஸ்ட்மென்ட்களும் செய்ய வேண்டுமென டார்ச்சர் உள்ளதாக சினிமா நடிகை சனம் ஷெட்டி பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ‘நவீன் நங்கையர் பவுண்டேஷன்’ சார்பில் வரும் 24ம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் மனு ஒன்று அளித்தார்.
பிறகு நடிகை சனம் ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு வாரத்திற்கு நான்கு வழக்குகள் வருகிறது. கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரியில் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே அதில் குற்றவாளியாக இருக்கிறார். பெங்களூருவில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
பள்ளி மாணவிகளை புனேவில் கழிவறையில் வைத்து அந்த பள்ளியில் இருக்கும் பணியாளர்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்களை பாதுகாப்பாக உடை அணியுங்கள் என சொல்லிக் கொடுங்கள் என கூறும் நீங்கள். ஆண் பிள்ளைகளுக்கும் சற்று கற்றுக்கொடுங்கள். அதற்காகத்தான் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம். இப்போது இருக்கும் பாதுகாப்பு போதாது என்பதை வலியுறுத்தும் வகையில் தண்டனை கடுமையாக வழங்க வேண்டும். உடனடியாகவும் கொடுக்க வேண்டும். பிறகு பெண்களை தொடுவதற்கு பயப்படுவார்கள்.
போராட்டத்துக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. காவல்துறையின் உதவி இல்லாமல் இந்த போராட்டத்தை எங்களால் நடத்த முடியாது. எல்லாரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஆண், பெண் என பிரித்து பார்க்க கூடாது. கேரள திரையுலகம் பற்றி நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை போன்று, தமிழ் சினிமா துறையிலும் நடக்கிறதா என்றால் நிச்சயம் நடக்கிறது. கேரளாவைப் போன்றும் தமிழ் திரையுலகிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்.
2 நாட்கள் முன்பு வீடியோவில் நான் கூறியிருக்கிறேன். அன்றே சொல்லி இருக்கலாம் என அப்பவே சொல்லி இருக்கேன். செருப்பாலே அடிப்பேன் நாயே என நானே சொல்லி இருக்கிறேன். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் ப்ராஜெக்ட் கிடைக்கும் என கூறினால், அங்கேயே போன் ஆப் செய்து விடுவேன். நானே அங்கு சென்று லாக் ஆகும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன். இப்ப வரைக்கும் நான் நடித்த அனைத்து படங்களும் நல்ல முறையில் எடுக்கப்பட்ட படங்கள் தான். நடிகைகள் மட்டுமல்ல, நடிகர்களும் இதுபோன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் இந்த படம் என்றால், அந்த படமே வேண்டாம். மலையாளத்தில், இரண்டு படம் நடித்துள்ளேன். என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். பெண்களுக்குள் ஒற்றுமை நிச்சயம் வேண்டும். நம் உரிமைக்காக நாம் போராடிதான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.