டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கமளிக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 9 நாட்களாக முடங்கின. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. அப்போது; மக்களவையில் நீடிக்கும் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா 2-வது நாளாக அவைக்கு வரவில்லை.
கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளின் சில நிமிடங்கள் மட்டும் அவையில் இருந்த பிரதமர் மோடி, தற்போது வரை வரவில்லை. மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் தர வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்படுகிறது? என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கருக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். தொடர்ந்து “இந்தியா” கூட்டணி கட்சிகள் என மாநிலங்களவையில் கார்கே குறிப்பிட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கார்கேவை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். கடும் அமளிக்கிடையே தொடர்ந்து பேசிய கார்கே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரை அவைத்தலைவர் பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்துவதை பாஜக கவுரவ பிரச்சனையாக கருதுகிறது என கூறினார். பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் புதிய உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.