சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் பரணிகுமார் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரையும் நியமித்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம். வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடும்போது, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி ரூ.67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.